இயேசு முதல் வருகையில் தன்னுடைய சொந்த ஜனங்களிடம் அவர் பேசும் போது அநேக காரியங்களை உவமைகளாகவே பேசினார். உவமைகள் இல்லாமல் அவர்களுடன் பேசவில்லை. ஏனெனில் என் வாயை உவமைகளினால் திறப்பேன், உலகத்தோற்ற முதல் மறைபொருளானவைகளை வெளிப்படுத்துவேன் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. சங்.78:1,2; மத்.13:34,25. இந்த உவமைகள் எல்லாம் அன்றைய இஸ்ரயேல் ஜனங்கள் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் கண்டும் காணாதவைகளையும், கேட்டும் உணராதவைகளையும் போனார்கள். மத்.13:13-15; இந்த பரலோக ராஜ்யத்தின் இரகசியங்களை அறிந்து கொள்வதற்கு தேவனுடைய அருள் வேண்டும். தேவன் ஒருவனுக்கு வெளிப்படுத்தினால் ஒழிய வேறே யாரும் அறிந்து கொள்ள முடியாது. மத்.13:11,17 இப்படியாக, ஆதி முதல் மறைக்கப்பட்ட இரகசியமாகிய உவமைகள், அநேகம் அவர் பேசியிருக்க அதில் ஒரு உவமையாகிய மத்.21:33-43; வரை சொல்லப்பட்ட உவமையை தள்ளப்பட்ட கல் என்ற தலைப்பின் கீழ் அறியலாம்.
உவமை என்றால் என்ன? அறியாத, புரிந்து கொள்ள முடியாத ஒரு காரியத்தை எளிய உதாரணங்களை கொண்டு விளக்குவது உவமை. உவமையே உவமையின் விளக்கம் அல்ல (அல்லது) சொல்ல வந்த கருத்து அல்ல. சொல்ல வந்த கருத்தை உவமேயம் என்று அழைக்கிறோம்.
தள்ளப்பட்ட கல். சங்.118:22-24;
வீடு கட்டுகிறவர்களால் ஆகாது என்று தள்ளப்பட்ட கல் மூலைக்குத் தலைக்கல் ஆயிற்று. வீடு கட்டுகிறவர்கள் ஒரு கல்லை ஆகாது என்று தள்ளினால் அந்த கல் வீடுகட்டுகிறதற்கு எந்த விதத்திலும் உபயோகப்படாத கல்லாக இருக்க வேண்டும். ஆனால் அந்த கல் அஸ்திபார கற்களிலே தலைகல்லாகவும், மிகவும் முக்கியமான கல்லாகவும் ஆனது எப்படி? அப்படி எங்கேயாவது நம்முடைய அனுபவத்திலே நடந்தது உண்டா? என்று நாம் சிந்திப்போமானால் தள்ளப்பட்ட எந்த கல்லும், தலைக்கல்லாக மாறினது இல்லை என்பதே நாமறிந்த உண்மை. அப்படியானால் வேதத்தில் சொல்லப்பட்ட வீடுகட்டுகிறவர்கள் யார்? தள்ளபட்ட கல் எது? என்ன காரியத்திற்காக அந்த கல்லை தள்ளினார்கள்? அந்த தள்ளப்பட்ட கல் எப்படி தலைக்கல் ஆயிற்று? என்ற கேள்விகளுக்கு பதிலாக ஒரு உவமையில் இயேசுவே கூறியிருக்கிறார். இயேசு கூறிய (மத்.21:33-43 வரை) உவமையை அநேக விளக்கங்கள் அநேக நபர்கள் கூறியிருந்தாலும், இப்பொழுது வேத வசனங்களை மட்டுமே ஆதாரமாக கொண்டு தியானிக்கலாம்.
வீடு கட்டுகிறவர்கள் யார்? அப்.4:5,6; ஜனங்களின் அதிகாரிகள், மூப்பர், வேதபாரகர்கள், பிரதா ஆசாரியர்கள். அப்.4:11; இவர்கள் வீடுகட்டுகிறவர்கள் என்று பேதுரு குறிப்பிடுகிறார்.
தள்ளப்பட்ட கல் எது? அப்.4:11; இஸ்ரயேலை ஆளுகிறவர்களாகிய ஜனங்களால் தள்ளப்பட்ட கல் இயேசு கிறிஸ்து. அப்.4:10,11.
என்ன காரியத்திற்காக அந்த கல்லை தள்ளினார்கள்:
வீடுகட்டுகிறவர்கள் அநேக காரியங்களினால் ஒரு கல்லை ஆகாது என்று ஒதுக்குவது போல, இஸ்ரயேலை ஆளுகிறவர்களால் இயேசு மேசியா அல்ல என்று அநேக காரணங்களால் ஒதுக்கப்பட்டார். அவைகளில் சில. காரணம் : 1 ஏசா.9:6,7; கர்த்தத்துவம் தோளில் மேல் இருக்கும். அவரின் ராஜஆளுகை நிலைக்கும். லூக்.1:31-33; தாவீதின் சிங்காசனம் என்றென்றைக்கும் நிலைக்கும். மீகா.5:2; என்றபடி அவர் ராஜாவாக வருவார் என எதிர்பார்த்தார்கள். ஆனால் இயேசுவோ தச்சனுடைய குமாரனாக பிறந்து, எளிய வாழ்க்கை வாழ்ந்தார். மத்.13:55-57; இயேசு ராஜகுமாரனாக இராஜ அரண்மையில் பிறக்கவில்லை. காரணம் : 2 மீகா.5:2; இஸ்ரயேலை ஆளப்போகிற மேசியா பெத்லகேமிலே பிறப்பார் என்று தீர்க்கதரிசனத்திலே கூறியிருப்பதால் மேசியா பெத்லகேமில் பிறப்பார் என்று எண்ணினார்கள். ஆனால் இயேசு பெத்லகேமில் பிறந்திருந்தாலும் அவர் நாசரேத் ஊரில் வளர்ந்ததால் நசரேனாகிய இயேசு என அழைக்கப்பட்டார். மத்.2:1; 2:5,6; மத்.2:23; 21:11 நாசரேத்திலிருந்து எந்த நன்மையும் உண்டாகுமோ? என்று எண்ணி இயேசுவை மேசியா அல்ல என்று புறக்கணித்தார்கள். ஆக முக்கியமான இந்த இரண்டு காரியங்களினால் இயேசுவை மேசியா அல்ல அல்லது கிறிஸ்து அல்ல என்று தள்ளினார்கள்.
தள்ளப்பட்ட கல் எப்படி தலைக்கல் ஆயிற்று: இஸ்ரயேல் ஜனங்களால் தள்ளப்பட்ட கல்லாகிய இயேசுவை இஸ்ரயேலின் தேவனாகிய யாவே கடவுள் பார்க்கிறார். அவருடைய பார்வையில் அந்த கல் விலையேறப்பெற்ற கல்லாகவும், ஜீவனுள்ள கல்லாகவும் இருப்பதால் அதை வீடு கட்டுவதற்கான தலைக்கல்லாகவும், அஸ்திபாரக்கல்லாகவும் எடுத்து சீயோனிலே வைக்கிறார். 1 பேது.2:4; ஏசா.28:16; இந்த அஸ்திபார கல்லோடு இணைத்து 12 கற்களை (அப்போஸ்தலர்கள்) அஸ்திபாரம் போட்டு, தேவனே தன்னுடைய ஊழியக்காரர்களை வைத்து ஒரு ஆவிக்குரிய மாளிகையை காட்டுகிறார்.எபே.2:20; 1பேது.2:4-9;சங்.118:22-24;
தோட்டக்காரர் உவமை ஒரு வீட்டெஜமானாகிய மனுஷன் இருந்தான். அவன் திராட்சை தோட்டத்தை உண்டாக்கி, வேலி அடைத்து, கோபுரத்தை கட்டி, குத்தகைக்கு விட்டு தூர தேசத்திற்கு போய் விட்டான். கனி காலம் வந்தது, அப்பொழுது வீட்டெஜமான் கனிகளை வாங்கி கொள்ளும்படி தன்னுடைய ஊழியக்காரர்களை அனுப்பினான். குத்தகைகாரர்கள் ஊழியக்காரர்களை கொன்று போட்டார்கள். பின்பு வீட்டெஜமான் தன்னுடைய குமாரனை அனுப்பினார். இவன் தான் சுதந்தரவாளி என்று அவனையும் கொன்று போட்டார்கள். எனவே வீட்டெஜமான் வந்து கொடியரை அழித்து, ஏற்ற காலத்தில் கனிகளை தருகிற ஜனங்களுக்கு குத்தகைக்கு விடுவான் என்று உவமையில் கூறினார். மத்.21:33-41.
உவமை விளக்கம் - உவமேயம் அதுபோல, வீட்டெஜமான்----------------இஸ்ரயேலின் கடவுளாகிய யாவே திராட்சை தோட்டம்----- இஸ்ரயேல் ஜனங்கள் குத்தகைக்காரர்கள்--------இஸ்ரயேலை ஆளுகிறவர்கள் ஊழியக்காரர்கள்------------தீர்க்கதரிசிகள் சொந்த குமாரன்------------இயேசு கிறிஸ்து கனி-------------------------------நற்பண்புகள் இஸ்ரயேலின் தேவனாகிய யாவே கடவுள், திராட்சை தோட்டமாக இஸ்ரயேல் ஜனங்களை பாவித்து அவர்கள் கனி கொடுக்க வேண்டும் என்பதற்காக அவர்களை ஆளுகிற குத்தகைகாரர்களை ஏற்படுத்தி விட்டு, இஸ்ரயேல் ஜனங்கள் மத்தியில் தன்னுடைய தீர்க்கதரிசிகளை அனுப்பி கனிகளை கேட்டார். அவர்களை கொலை செய்ததால் தீர்க்கதரிசியாகிய தன்னுடைய குமாரனை அனுப்பினார். அவரையும் இஸ்ரயேலர் கொன்றனர். ஆதலால் பரலோக ராஜ்ஜிய ஆசீர்வாதங்கள் அவர்களிடத்திலிருந்து நீங்கப்பட்டு நற்பண்புகள் உடைய (கனி கொடுக்கிற) ஜனங்களாகிய திருச்சபையாருக்கு கொடுக்கப்படும். இஸ்ரயேல், புறஜாதியார் என்றும், ஆண், பெண் என்று வேறுபாடு இன்றி, இயேசுவை ஏற்றுக் கொண்டு நற்பண்புகளுடன் நடக்கிறவர்களே திருச்சபையார். இதுவே பரலோக ராஜ்ஜியத்தில் இரகசியமாக இயேசு கூறினார்.
சிந்தனைக்கு : அப்.2:20; தேவன் வாசம் பண்ணும் மாளிகையில் இயேசு மூலைக்கல்லாயிருக்க, மூலைக்கல்லே தேவன் என்று விசுவாசிக்கிறவர்களே! சற்று சிந்தியுங்கள். வீடு கட்டுகிற வீட்டெஜமான் வேறு, வீட்டின் மூலைக்கல் வேறு என்று வேதம் தெளிவாக்குகிறதை சிந்தித்து தெளிவு பெறுக.