முக்கிய குறிப்பு:
இக்கட்டுரையின் தொனி கிண்டல் செய்வதுபோல இருக்கலாம். கர்த்தர் இரத்தம் சிந்தி உயிரைக் கொடுத்து சம்பாதித்த குடும்பத்தை மதமாக மாற்றிவிட்ட மாபாதகர்களின் தலைமுறையில் ஒருவனாக இது கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்து நானே காறித் துப்பிக்கொள்ளும் செயல். இது சாம்பலில் அமர்ந்து கொண்டு ஓலமிடும் ஒரு பைத்தியக்காரனின் புலம்பல் ஆகவே இதன் தொனி இப்படித்தான் இருக்கும்.
இக்கட்டுரையில் கிறிஸ்துமஸ், ஞாயிறு ஆராதனை போன்றவற்றைப் பற்றிய கருத்துக்கள் அவற்றைச் அனுசரிப்பவர்களைப் பாவிகள் என்று குற்றப்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்படவில்லை. மாறாக ஆதிக் கிறிஸ்தவர்களுக்கும் நமக்கும் உள்ள வேறுபாட்டைக் காட்டும்படியே எழுதப்பட்டது. முறைமைகளை மாற்றுவதால் எழுப்புதல் வந்துவிடாது. ஆனாலும் ஆதிச்சபைக்கும் நமக்குமுள்ள வேறுபாட்டை நாம் அறிந்து, நாம் அவர்களைவிட்டு எவ்வளவு தூரம் கடந்து வந்துவிட்டோம் என்பதை உணர்வது மிக மிக அவசியம். ஆதிக்கிறிஸ்தவர்கள் இயேசுவுக்கு சீஷராக வாழ்ந்ததன் நிமித்தம் அடைந்த உபத்திரவங்களை விளக்கும் படங்களையும் இணைத்திருக்கிறேன்.
கீழ்கண்ட நமது சாதனைகளைப் படித்து ஆதித்திருச்சபையினரை விட நாம் உயர்ந்தவர்கள். நிறைய தெரிந்தவர்கள் என்று நமது காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளலாம்.
சாதனை #1
இயேசுகிறிஸ்து பிறந்தது டிசம்பர் 25 என்ற உண்மை ஆதிக்கிறிஸ்தவர்களுக்குத் தெரியாது. அப்போஸ்தலன் பேதுருவுக்கே தெரியாது. இவ்வளவு ஏன் இந்த உண்மை இயேசுவின் தாயாகிய மரியாளுக்கே கூடத் தெரியாது. அவர்களெல்லோரும் டிசம்பர் 25 ரோமானியக் கடவுளான சூரியக்கடவுளின் பிறந்தநாள் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு சிலுவைமரம் தெரியும் கிறிஸ்மஸ் மரம் தெரியாது. அதுமாத்திரமின்றி ”சாண்டா கிளாஸ்” என்ற மாபெரும் தேவ மனிதரை ஆதிக்கிறிஸ்தவர்களில் ஒருவருமே அறியாதவர்களாயிருந்தார்கள் என்பது வருந்தத்தக்க உண்மை.
சாதனை #2
ஞாயிற்றுக்கிழமைதான் தன்னை ஆராதிக்க வேண்டும் என்று கர்த்தர் சொன்னது ஆதிக்கிறிஸ்தவர்களுக்குத் தெரியாமல் எல்லா நாளும் அவரை ஆராதித்துக் கொண்டிருந்தார்கள்.(அப் 2:46-47). ஒன்றுக்கு மேற்ப்பட்ட சகோதரர் கூடும் நாளெல்லாம் ஆராதனை நாள்தான் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஞாயிற்றுக்கிழமை ஆராதனைதான் பரலோகச் சட்டம் என்னும் உண்மை நான்காம் நூற்றாண்டு விசுவாச வீரர்களுக்கே தெரியவந்தது.
சாதனை #3
முதலாம் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு தங்களோடு ஒருவராக கர்த்தருக்கு சாட்சியாக வாழ்ந்த இயேசுவின் தாயாகிய மரியாள் மரியாதைக்குரிய முன்மாதிரி என்பது மட்டுமே தெரிந்திருந்தது. தொழுகைக்குரியவர் என்ற உண்மை தெரியாதிருந்தது.
சாதனை #4
”விசுவாச அறிக்கை” என்ற 20ஆம் நூற்றாண்டு செழிப்பின் உபதேசகர்களுடைய மாபெரும் கண்டுபிடிப்பு ஆதிகிறிஸ்தவர்களுக்கு மாத்திரம் தெரிந்திருந்தால் அவர்கள் உபத்திரவத்தில் உழன்றிருக்க மாட்டார்கள். சிங்கங்களுக்கு இரையாகியிருந்திருக்க மாட்டார்கள்.”கிறிஸ்துவுக்குள் நான் தேவநீதி” என்று திரும்பத்திரும்ப அறிக்கையிட்டு நீதியை download செய்துகொள்ளுதலும். ”கிறிஸ்துவுக்குள் நான் ஐசுவரியவான்” என்று திரும்பத் திரும்ப அறிக்கையிட்டு பில்கேட்ஸை விட பணக்காரர் ஆகுதலுமாகிய மாபெரும் கண்டுபிடிப்பின் பெருமை இந்நூற்றாண்டு ஞானிகளாகிய எங்களுக்கே உரியது.
சாதனை #5
கைகளால் கட்டப்பட்ட ஆலயத்தில் நான் வசிப்பதில்லை என்று சொன்ன தனது நிலையை கர்த்தர் மாற்றிக்கொண்டு விட்டார் என்ற உண்மை ஆதிக்கிறிஸ்தவர்களுக்குத் தெரியாது.அவர்கள் தாங்களே கிறிஸ்துவின் ஆலயம் என்று நினைத்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இதைக் கண்டுபிடித்து விண்ணை முட்டும் கோபுரங்களுடைய ஆலயங்களைக் கட்டி அதில் கர்த்தரைக் குடிவைத்த பெருமையும் நான்காம் நூற்றாண்டுக்குப் பின் வந்த விசுவாச வீரர்களுக்கே உரியது.
சாதனை #6
கிறிஸ்துவோடு பாவத்துக்கு மரித்து நீதிக்குப் பிழைப்பதை மனதார உணர்ந்து அதை அடையாளமாகக் காட்டும் திருமுழுக்கை எடுக்கும் அளவுக்கு முதல் நூற்றாண்டுக் குழந்தைகள் ஞானமற்றவர்களாயிருந்தார்கள். ஆனால் நான்காம் நூற்றாண்டிலிருந்து பிறந்த குழந்தைகள் அனைவரும் பிறந்தவுடனே அதைச் செய்யுமளவுக்கு விஷேச ஞானமுடையவர்களாய்ப் கர்த்தரால் படைக்கப்பட்டவர்கள்.
சாதனை #7
ஆதிக்கிறிஸ்தவர்கள் பழைய ஏற்பாடு முறைமைகள் அனைத்தும் ஒழிக்கப்பட்டு புது உடன்படிக்கை உதயமாகிவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் பழைய ஏற்பாட்டின் தசமபாகம் மாத்திரம் இன்னும் ஒழிக்கப்படவில்லை என்ற உண்மை அவர்களுக்குத் தெரியாதிருந்தது. பழைய ஏற்பாட்டில் பண்டகசாலையில் செலுத்த வேண்டும். புதிய ஏற்பாட்டுப் பண்டகசாலை என்பது மேய்ப்பனுடைய வங்கிக் கணக்காகும்.
சாதனை #8
விசுவாசிகளின் ஐக்கியம் என்றால் ஆவிக்குரிய உறவு கொள்வது என்று முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள். கிறிஸ்துவைத் தலையாகவும் தங்களை ஒரே சரீரத்தின் வெவ்வேறு உறுப்புகளாகவும் பாவித்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆனால் விசுவாசிகளின் ஐக்கியமென்றால் நிகழ்ச்சிகள் நடத்துவதும் அதில் பங்கெடுப்பதும் என்ற நமக்குத் தெரிந்த பேருண்மை அவர்களுக்குத் தெரியவில்லை. நிகழ்ச்சிகள் முடிந்தபின் நாம் நமது பழைய வாழ்க்கையைத் தொடரலாம். ஆனால் இதெல்லாம் அந்நியரும் பரதேசிகளுமாகிய அவர்களுக்குத் தெரியாது.
சாதனை #9
ஆதிக்கிறிஸ்தவர்கள் புத்தியுள்ள ஆராதனையென்றால் சரீரங்களை பரிசுத்த பலியாக் தேவனுக்கு ஒப்புக்கொடுப்பதுதான் என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் எங்களுக்கோ ஒரு மெலடியான பாட்டு அப்புறம் கிடாரோ, கீபோர்டோ இருந்துவிட்டால் போதும் சூப்பராக ஆராதிப்போம். தினமும் புதுப்புது ஆராதனைகளை கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறோம். Soaking Prayer, Prophetic worship, Apostalic worshipஎன்று Software versions போல புதுசு புதுசாகக் கண்டுபிடித்து வெளியிடுகிறோம். சரீரங்களை ஒப்புக் கொடுப்பது மாத்திரமே புத்தியுள்ள ஆராதனை என்று ரோமர் 12:1 -இல் கூறியிருப்பதால் எங்களுடைய ஆராதனையை ஆதித்திருச்சபையார் புத்தியற்ற ஆராதனை என்பார்கள். சொல்லிவிட்டுப் போகட்டும் அவர்களுடைய ஆராதனைக்கு அடியும், உதையும்தான் விழுந்தது, எங்கள் ஆராதனைக்கோ மேலிருந்து தங்கப்பொடியே விழுகிறது. எது சிறந்ததென்று நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.(இசை வழியாக கர்த்தரை துதிப்பது தவறல்ல, ஆனால் சரீரத்தை அநீதியின் அவயவங்களாக ஒப்புக்கொடுத்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை மட்டும் நாம் செய்யும் இசைவழி துதியானது அவரைக் கேலி செய்யும் செயலாகும்)
சாதனை #10
ஆதிக்கிறிஸ்தவர்கள் இயேசுவைப் பின்பற்றுகிறேன் பேர்வழி என்று நினைத்துக் கொண்டு சத்தியத்தைச் சொல்லி எல்லோருக்கும் சத்துருவாகிப் போனார்கள். நாங்களோ அதே வேதத்தைப் பயன்படுத்தியே யாரையும் புண்படுத்தாமல் லாவகமாக சுவிசேஷத்தைச் சொல்லி எல்லோருக்கும் நண்பர்களாகி விட்டோம். அவர்கள் வாசல் இடுக்கமானது, ஒரு குறுகிய வட்டத்துக்குள் வாழ்ந்தார்கள். எங்கள் வாசலோ எங்கள் மனதைப் போலவே விசாலமானது. அவர்களைப் பொறுத்தமட்டில் ஊழியம் என்றால் ஒருவனை மறுபிறப்புக்கு வழிநடத்தி அவனை சீஷனாக உருவாக்குவது. எங்களைப் பொறுத்தவரை ஊழியம் என்பது மதமாற்றம் மட்டுமே. (உண்மையாய் ஊழியம் செய்யும் சில மிஷனரி அண்ணன்மார் இதற்கு விதி விலக்கு)
சாதனை #11
ஆதிக் கிறிஸ்தவர்களுக்கு மூன்று எதிரிகள் உலகம்இ மாமிசம் மற்றும் பிசாசு ஆகியன. எங்களுக்கு இருக்கும் ஒரே எதிரி பிசாசு மட்டுமே. அவனைக் கட்டுவோம், ஓட்டுவோம், ஆட்டுவோம், மொத்தமாகக் கட்டி நரகத்துக்கு அனுப்புவோம் அக்கினியால் சுட்டெரிப்போம்.
..என்னது??? உலகம், மாம்சமா? அப்படீன்னா என்னங்க???
சாதனை #12
தீர்க்கதரிசி என்றால் தேவனுக்குக் கண்ணாக இருந்து சபையை வழிநடத்துபவன், வாயில் காப்பாளன், ஜாமக்காரன் என்றெல்லாம் ஆதித்திருச்சபையார் நினைத்திருந்தார்கள். ஆனால் தீர்க்கதரிசி என்பவன் தலையில் கைவைத்து குறி சொல்லுபவன், அப்புறம் ஒவ்வொரு புத்தாண்டுக்கும் முதல் தேதியிலே அந்த ஆண்டு என்னன்ன நடக்கப்போகுதுன்னு அதாவது பல இடங்களில் வெள்ளம், இந்தோனேஷியாவில் பூகம்பம், பல எரிமலைகள் குமுறும் என்பது போன்ற யாராலுமே கண்டுபிடிக்கமுடியாத அரிய காரியங்களை தீர்க்கமாக தரிசித்து ஜனங்களை எச்சரிப்பவன் மட்டுமே என்ற உண்மை எங்களுக்கே தெரியும்.
சாதனை #13
பழைய ஏற்பாட்டில் ஆசாரியன் சாதாரண ஜனங்கள் என்ற வேறுபாடு இருந்தது. இதை இயேசுவின் சிலுவை மரணம் ஒழித்து எல்லோரும் சகோதரர்கள் (மூப்பரும் கண்காணியும் கூட சகோதரரில் ஒருவரே) என்று ஆக்கிவிட்டதாக ஆதித்திருச்சபையார் நினைத்திருந்தார்கள். ஆனால் அது உண்மையல்ல என்பதை நான்காம் நூற்றாண்டுக்குப் பின்னால் நாங்கள் நிரூபித்து மறுபடியும் Clergy-Laity முறையைக் கொண்டுவந்து விட்டோம்.
மகாபெரிய சாதனை #14
மேற்சொன்ன எல்லாவற்றையும் விட மகுடம் வைத்தாற்போல எங்களுடைய சிறந்த கண்டுபிடிப்பு என்னவென்றால் தேவனையும் நேசித்து உலகத்தையும் நேசிக்க முடியும் என்பதை நிரூபித்ததன் மூலம் கிறிஸ்தவத்துக்கு ஒரு புதிய இலக்கணம் வகுத்ததே! ஆதித் திருச்சபையாருக்கு இந்த உண்மையெல்லாம் தெரியவே தெரியாது. அவர்கள் தேவனை மாத்திரம் நேசித்து உலக இன்பங்களை அனுபவிக்க முடியாத பரிதாபமான நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்