இதையே நான் மாற்றிக் கேட்கிறேன். நம் தமிழர்களையே எடுத்துக்கொள்வோம், வேதத்தை ஆராயாமல், அல்லது குறைந்தபட்சம் சுயமாக வாசிக்காமல் நீங்கள் சொல்லும் 'உபதேசங்களை' யார் அறிய முடியும்? இந்த முன்னேறிய காலகட்டத்திலேயே வசனங்களை இவ்வளவு ஆராய்ந்து பார்க்கும் நமக்கே ஆயிரத்தெட்டு கேள்விகள் உள்ளது. தமிழ் வேதாகமம் வெளிவந்து 100 ஆண்டுகளுக்கு மேலாகிறது என்றாலும் எத்தனை பேர் அதை வாசிக்க முடிந்தது? எத்தனை பேர் ஆராயமுடிந்தது? ஏன் இப்பொழுது கூட படிக்கத்தெரியாத கோடிப்பேர் உண்டே. படிக்கத்தெரிந்த எத்தனைபேர் வேதத்தைப் படிக்கிறார்கள். இன்றைக்கு கிறிஸ்தவன் என்று சொல்லிக்கொள்கிறவர்கள் எல்லாம் வேதம் வாசிப்பதிலோ, அல்லது ஆராய்ந்து அறிவதிலோ ஆர்வம் காட்டுகிறார்களா என்ன?
மேலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இந்த வேதம் உலகத்தில் யாருக்குமே கிடைக்கவே இல்லையே. அவர்கள் கதிதான் என்ன என்று என்றைக்காவது யோசித்திருக்கிறீர்களா? அவர்களை தேவன் பார்த்துக்கொள்வார் என்று டெக்னிகலாக பதில் சொல்பவர்கள் உண்டு. அவர்களை தேவன் பார்த்துக்கொள்வார்கள் என்றால் இப்போது அறியாதவர்களையும் தேவன் பார்த்துக்கொள்வார் என்பதுதான் என் வாதம்.
உலகத்தில் எல்லாருக்குமே வேதம் தெளிவாக போதிக்கப்பட்டு, அதை அவர்கள் கைக்கொள்ள முடியாதபட்சம் நீங்கள் சொல்லும் தண்டனை கொடுப்பது மிகவும் நியாயமான தீர்ப்பு, ஆனால் பள்ளிக்கே போகாதவனுக்கு பரீட்சை வைத்தால்... என்ன நியாயம்?
பாவத்தின் சம்பளம் மரணம், அப்படியே நீங்கள் சொன்னபடி கீழ்ப்படியாதவர்களுக்கு மரண தண்டனை கொடுத்தாலும் மீண்டும் எதற்கு உயிரோடு எழுப்பவேண்டும்? வேதம் எல்லோருக்கும் உயிர்தெழுதல் உண்டு என்றல்லவா வாக்களிக்கிறது!