சிலுவையில் அறையப்பட்டது வெள்ளிக்கிழமையல்ல

பிரியமான கிறிஸ்தவ சகோதர சகோதிரிகளே,

 

தற்போது கிறிஸ்தவர்கள் மத்தியில் விசேஷமாக கொண்டாடப்படும் பண்டிக்கைகள் இயேசுவின் பிறப்பை குறிக்கும் “கிறிஸ்துமஸ்” அடுத்து இயேசு மறித்து உயிர்த்தெழுந்த நாளை குறிக்கும் “ஈஸ்டர்”. இயேசு பிறந்தது தற்போது உலகத்தார் அனைவரும் கொண்டாடிவரும் டிசம்பர் 25-ந் தேதி அல்ல. அது அக்டோபர் மாதம் என்பதை வேத வாக்கியங்களின் மூலமாக அறிந்துள்ளோம்.

தற்போது இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாள் எது? அவர் உயிர்த்தெழுந்த நாள் எது? என்று அறிந்து கொள்வது நல்லது. இயேசு மாமிசத்திலிருந்து கொண்டு செய்ய வேண்டிய காரியங்களை அடையாளமாக எடுத்துக் கூறி, தாமும் யோனாவைப் போல் மூன்று இரவும், மூன்று பகலும் பூமியின் இருதயத்தில் இருக்கப் போவதாகச் சொன்னார். அவர் சொன்னபடியே மூன்று இரவும், மூன்று பகலும் பூமியின் இதயமாகிய பாதாளத்தில் இருந்தார். இது பொய்யல்ல. கிறிஸ்துவ சபைகள் சொல்லுகிறபடி ஒன்றரை நாளல்ல. இரண்டு நாட்களல்ல. 72 மணி நேரங்கள் கொண்ட 3 இரவும், 3 பகலும் பாதாளத்திலிருந்தார் என்பதை முதலில் ரூபிப்போம்.

இதனை ஆராய முதலில் அவருடைய உயிர்த்தெழுதலை ஸ்திரப்படுத்திக் கொள்வோம். லூக்.24:1-ல் வாரத்தின் முதலாம் நாள் காலையில் அதிக இருட்டோடென்றும் மத் 28:1-ல் ஓய்வு நாள் முடிந்து வாரத்தின் முதலாம் நாள் விடிந்து வருகையில் என்றும் யூதருக்கு ஓய்வு நாள் என்பது வாரத்தின் ஏழாம் நாளாகிய சனிக்கிழமை மாற்கு 16:2-ல் வாரத்தின் முதலாம் நாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலே சூரியன் உதயமாகிற போது என்றுமிருப்பதால், இதற்கு முந்தின நாள் சனிக்கிழமை வேலை செய்யப்படாத ஓய்வுநாள் என்றறிகிறோம்.

லூக் 23:56-ன் படி ஸ்திரிகள் கந்தவர்க்கங்களையும், பரிமளதைலங்களையும் ஆயத்தம் பண்ணி கற்பனையின்படி ஓய்ந்திருந்தார்கள் என்றால் கற்பனைப்படியான வார ஓய்வு நாளுக்கு சனிக்கிழமைக்கு முந்தி வெள்ளிக்கிழமை தினம் கந்தவர்க்கங்களையும், பரிமளத்தைலங்களையும் ஆயத்தம் செய்திருக்க வேண்டும்.

தவிர மத் 27:62,63-66 வசனங்களைப் பார்க்கும்போது ஆயத்த நாளுக்குப் பின்னான மறுநாளிலே பிரதான ஆசாரியரும், பரிசேயரும் பிலாத்துவினிடத்தில் கூடிவந்து, ஆண்டவனே, இந்த எத்தன் (இயேசு) உயிரோடிருக்கும்போது, “மூன்று நாளுக்குப் பின் எழுந்திருப்பேன்”(மாற்கு 8:13) என்றதால், கல்லறையை முத்திரை போட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அவ்விதமே கல்லறை முத்திரை போட்டு, காவல் வைத்து கல்லறையைப் பத்திரப்படுத்தினார்கள். இது எந்த நாள்? 62-ம் வசனத்திலுள்ள ஆயத்த நாள் எது? ஆயத்த நாளுக்குப் பின் வந்த பண்டிகை (ஓய்வு) நாள் எது? பண்டிகைக்குப் பிந்தின வேலை செய்யக் கூடிய மறுநாள் எது? இவைகளை ஆராய்ந்தறிந்தால் இதன் ரகசியம் எளிதில் விளங்கும்.

லூக் 23:54-ல் அவரைக் கல்லறையில் வைத்த நாள் ஆயத்த நாளாயிருந்தது – தொடர்ந்து ஓய்வு நாளும் ஆரம்பமாயிற்று என்று பார்க்கிறோம். அவரைக் கல்லறையில் வைத்த நாள் எதற்கு ஆயத்த நாள் என்றும், ஆரம்பமான ஓய்வு நாள் எது என்றும் கவனிக்க வேண்டும். மாற் 15:42-லும் ஓய்வு நாளுக்கு முந்தின நாள் ஆயத்த நாளாயிருந்த படியால் சாயங்காலாமான போது, அரிமத்தியா ஊரானான யோசேப்பு இயேசுவை அடக்கம்ட செய்தான் என்று வாசிக்கிறோம்.

இயேசுவை அடக்கம் பண்ணியது ஒரு ஓய்வு நாளுக்கு முந்தின ஆயத்த நாள், இது சனிக்கிழமை (கற்பனையின்படியான) ஒய்வு நாள் அல்லவென்பதை மனதிற் கொள்ள வேண்டும்.

யோவா.18:28; இயேசுவை தேசாதிபதியிடம் கொண்டு போன போது, விடியற்காலம். அன்று இரவு தீட்டுப்படாமல் பாஸ்காவைப் புசிக்கத்தக்கதாக அவர்கள் (யூதஜனமனைத்தும்) தேசாதிபதியின் அரண்மனைக்குள் பிரவேசியாதிருந்தார்கள் என்பதால் பாஸ்கா பண்டிகை (ஓய்வு) நாளுக்கு முந்தின ஆயத்த நாளில் இயேசு அடக்கம் பண்ணப்பட்டதாக அறிகிறோம். இயேசு இராப்போஜனம் புசித்தது காட்டிக் கொடுக்கப்பட்டது, தீர்ப்பு வழங்கப்பட்டது, சிலுவையில் அறையப்பட்டது, பாஸ்கா பண்டிகைக்கு ஆயத்தமானது.

எனவே கற்பனையின் படியான ஓய்வு நாளாகிய சனிக்கிழமைக்கு முந்தின வெள்ளிக் கிழமையான ஆயத்த நாளல்ல என்று தீர்க்க வேண்டியிருக்கிறது. ஏனெனில் ஸ்திரிகள் கந்தவர்க்கங்களையும், பரிமளத்தைலங்களையும் ஆயத்தம் செய்ததும், பிலாத்து இயேசுவின் கல்லறைக்கு முத்திரை போட உத்தரவிட்டதும், காவல் வைத்ததும் வெள்ளிக்கிழமையாகும். இவைகளுக்கு பின்னே கற்பனையின்படியான ஓய்வு அனுசரிக்கப்பட்டது.

தற்கால கிறிஸ்துவ சபைகள் இயேசு – வெள்ளிக்கிழமை பாடுபட்டு மரித்தார் என்று சொல்லுவதற்கு சரியான ரூபகரமில்லை என்பதை இங்கு எடுத்துக் காட்டுகிறோம்.

அப்படியே வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு இயேசு மரித்து 6 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டு ஞாயிறு காலை எழுந்திருந்தால் அவர் மத் 12:40-ன்படி 3 இரவும், 3 பகலும் பூமியின் இருதயமாகிய பாதாளத்திலிருந்திருக்க முடியாதே!

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம் வேதபாரகரும், பரிசேயரும் அடையாளம் வேண்டும் என்று கேட்ட பொழுது யோனா தீர்க்கதரிசியின் அடையாளத்தை தவிர வேறே அடையாளம் இவர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. யோனா இரவும், பகலும் மூன்று நாள் (3 Days and 3 Nights ) ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல மனுஷ குமாரனும் இரவும் பகலும் மூன்று நாள் (3 Days and 3 Nights ) பூமியின் இருதயத்தில் இருப்பார் என்று கூறினார். இயேசுவே மேசியா என்பதற்கு இயேசுவானர் இந்த அடையாளத்தை தந்திருந்தார். (மத் 12:38-40).

யோனா, 3 இரவும் 3 பகலுமாக 72 மணி நேரங்கள் மீன் வயிற்றில் இருந்ததாக லூத்தரன் வேதாகமத்தில் பார்க்கலாம். அப்படியானால் இயேசுவும் 72 மணி நேரங்களுக்குப் பின் எழுந்தார் என்பது உண்மை.

ஆகவே நமது ரட்சகர் அவ்வருஷம் நீசான் மாதம் 14-ம் தேதி துவங்கும் இரவு அதாவது 1 கொரி. 11:24-ன்படி காட்டி கொடுக்கப்படும் முன் செவ்வாய்க் கிழமை இரவு ராப்போஜனத்தை ஏற்படுத்தி, பின் காட்டிக் கொடுக்கப்பட்டு, அன்றிரவெல்லாம் யூதர்களால் பல பாடுகளையனுபவித்து, சேவல் கூவும் அதிகாலையில் பேதுருவினால் மறுதலிக்கப்பட்டு, புதன் கிழமை 3-ம் மணி வேளை வரை (நமக்கு காலை 9 மணி) அன்னா, காய்பா, பிலாத்து என்பவர்களின் விசாரணைக்குட்பட்டு 3-ம் மணி வேளை (காலை 9 மணி) சிலுவையில் அறையபட்டு புதன் 9-ம் மணி வேளையாகிய 3-மணிக்கு பாஸ்கா ஆடு அடிக்கப்படும் நேரத்தில் உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவாட்டுக்குட்டியாக, நமது பாஸ்காவாகிய (1கொரி 5:7) இயேசு உயிர்விட்டார். இயேசுவானவர் சிலுவையில் உயிர்விட்டபோது, பாஸ்கா பண்டிகை ஒருவனை விடுதலை பண்ணுவது வழக்கம். அவ்வழக்கத்தின்படி இயேசுவை பிலாத்து விடுதலை செய்ய யோசனை கூறியதால் பாஸ்கா அன்று இரவுதான் ஆசரிக்கப்பட வேண்டியதென்றறிகிறோம். தவிர யோவா 9:13-ல் பிலாத்து இயேசுவை கபத்தா என்று சொல்லப்பட்ட இடத்தில் நியாயம் விசாரிப்பதற்காக நிறுத்தினான் . அந்த நாள் பாஸ்காவுக்கு ஆயத்தம் நாளும் ஏறக்குறைய ஆறு மணி நேரமுமாயிருந்து என்பதால், நீசான் மாதம் 14-ம் தேதியாகிய புதன் கிழமை மணியாயிருந்தது என்பது தெளிவு. ஆகையால் அவர் என்றைக்கு ராப்போஜனத்தை ஏற்படுத்தினார் என்று சிந்திக்க வேண்டியது அவசியம்.

(A) செவ்வாய் இரவு முதல் புதன் மாலை வரை – நீசான் 14-ம் தேதியாகும். செவ்வாய் கிழமை இரவு ராப்போஜனம், காட்டிக் கொடுக்கபடுதல், விடிந்ததும் புதன் காலை விசாரணை சிலுவையிலறையப்பட்டு மரித்ததும், அடக்கம் பண்ணப்பட்டதுமாகும். இது பெரிய ஓய்வு (பாஸ்கா) நாளுக்கு ஆயத்த நாள் ஆகும்.

(B) புதன் கிழமை இரவு முதல் வியாழக்கிழமை மாலை வரை பாஸ்கா நாள் யாதொரு வேலையும் செய்யப்படாமல் சபை கூடும் நாளாகும்.

(C) வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை மாலை வரை கற்பனையின் படியான ஓய்வு நாளாகிய சனிக்கிழமைக்கு ஆயத்த நாளாகும். இந்த நாளில் தான் ஸ்திரிகள் கந்தவர்க்கங்களையும், பரிமளத் தைலங்களையும் இடித்து பிழிந்து ஆயத்தம் பண்ணியதும், ஆசாரியரும் பரிசேயரும் பிலாத்துவிடம் வந்து கல்லறைக்கு முத்திரை போடச் சொல்லிக் கேட்டு முத்திரையிட்டு காவல் வைத்ததுமன நாள்.

(D) வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை மாலை வரை கற்பனையின்படியான ஓய்வு ஆசரிக்கப்பட்டது. வேலை செய்யப்படாத நாள். அப்படியானால் இயேசு அடக்கம் பண்ணப்பட்டது.

1. புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை மாலை வரை ஒரு இரவும், ஒரு பகலுமாக 1 நாள் கழிந்தது.

2. வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை மாலை வரை ஒரு இரவும் ஒரு பகலுமாக 2-ம் நாள் கழிந்தது.

3. வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை மாலை வரை ஒரு இரவும் ஒரு பகலுமாக 3-ம் நாள் கழிந்தது.

இவ்விதமாக மூன்று நாட்கள் கழிந்து சனிக்கிழமை இரவு சூரியன் அஸ்தமித்தபின் இயேசு உயிரோடெழுந்தார். ஆனால் அச்சமயம் இருட்டுக் காலமாயிருந்ததால் யாரும் வந்து பார்த்திருக்க முடியாது. விடிந்ததும், வாரத்தின் முதலாம் நாளாகிய ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தான் ஸ்திரிகள் வந்து பார்த்திருக்கக்கூடும். அப்போது தான் வந்தார்கள். ஆனால் அவர் அங்கேயில்லை, எழுந்தருந்தார் என்று லூக்கா சுவிசேஷகன் சொல்லுவதால் அறிகிறோம்.(லூக் 24:5). இவ்விதம் யோனாவைப் போல் இவர் 3 இரவும், 3 பகலும் பூமியின் இருதயத்திலிருந்தார்.

எனவே உலக கிறிஸ்தவ மக்கள் கொண்டாடும் இயேசுவின் உயிர்த்தெழுதலும் சரியானது இல்லை என்று அறிகிறோம். உலக வழக்கத்தின்படி பல விசேஷ நாட்கள் தேதி மாறாதிருந்தாலும், நாட்கள் (கிழமைகள்) மாறிதான் வரச்செய்யும். ஆனால் கிறிஸ்தவர்கள் கொண்டாடும் இந்த ஈஸ்டர் பண்டிகை மட்டும் ஞாயிற்றுக் கிழமையிலே வருவதெப்படி? அவர் சிலுவையில் அறையப்பட்டது. கிழமை மாறாமல் வெள்ளிக்கிழமைகளில் வருவதும் அதிசயம் தான். ஆகவே பேர்கிறிஸ்தவர் விசேமாக ஒரு கிரம நாட்கணக்கை வைத்துக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். இதுவும் ஒரு மோசடியே உண்மையான கிறிஸ்தவ மக்கள் அறிந்துக் கொள்வது நல்லது.