நான் பரலோகத்தில் இருப்பதைக் போல கனவு கண்டேன். அங்கு ஒரு தூதன் ஒரு நோட்டில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தான். நான் அவன் என்ன எழுதுகிறான் என்றுப் பார்க்க ஆவல் கொண்டேன். அவன் எழுதுகிறது எனக்கு ஆச்சரியமாக இல்லை, ஆனால் அவன் எழுத வைத்திருந்த நித்திய மை (Eternal Ink) என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அந்த மை அந்த பாட்டிலில் இருக்கும்போது கறுப்பாக இருந்தது. ஆனால் எழுத ஆரம்பித்த போதோ தண்ணீரைப் போல நிறமே இல்லாமல் மாறினது. அந்த தூதன் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருந்தான். அவன் எழுதின உடனே அந்த பேப்பரில் இருந்த எழுத்துக்கள் மறைந்து போனது. அந்த தூதன் அதில் கவனம் செலுத்தாமல், தொடர்ந்து பக்கம்பக்கமாக எழுதிக் கொண்டே இருந்தான். நான் நினைத்தேன், இந்த தூதன் இப்படி பக்கம் பக்கமாக எழுதி என்ன பயன்? ஓன்றுமே இந்த பக்கங்களிலே இல்லையே! அவன் திரும்ப அதை படிக்க முடியாதே என்று நினைத்தேன்.
எனது ஆச்சரியத்திற்கு, ஒரு பக்கத்தில் ஒருவரியின் எழுத்துக்கள் அப்படியே அழியாமல் நின்றன. அந்தத் தூதனை பார்த்தபோது அவன் முகத்தில் ஒரு திருப்தி நிலவியது. அந்த புத்தகம் முழுவதும் எழுதி முடிக்கும் தருவாயில் ஒரு சில பக்கங்களில் ஒரு சில எழுத்துக்கள் மட்டுமே அழியாமல் அப்படியே இருந்தன. மற்றவை எல்லாம் அழிந்துப் போயின. அப்படி என்னதான் அந்த தூதன் எழுதினான், ஏன் அவனுடைய எழுத்துக்கள் அழிந்து போயின என்பதன் இரகசியத்தை அறிய மிகுந்த ஆவல் கொண்டேன். கடைசியாக அந்தத் தூதனிடமே கேட்டு விடுவது என்று தீர்மானித்து அவனிடம் கேட்டேன். அதற்கு அந்த தூதன் சொன்ன பதில் என்னை திடுக்கிட வைத்தது. அந்த தூதன் என்னைப் பார்த்துச் சொன்னான்: நான் என்ன எழுதுகிறேன் என்று உனக்கு ஆச்சரியமாக இருக்கும்! சர்வ வல்ல தேவன் உலகத்தில் உள்ள மக்களின் வாழ்க்கையை குறித்து எழுதச் சொன்னார். இதில் நான் எழுதுகிற ஒவ்வொன்றும் சரியாக அவர்கள் என்னப் பேசினார்கள், என்ன செய்தார்கள் என்பதை மிகவும் சரியாக எழுதியிருக்கிறேன். நீ என்னிடத்தில் கேட்பதால் நான் இப்போது எழுதிக் கொண்டிருந்தது உன்னுடைய வாழ்க்கையைதான். ஆண்டவர் என்னை உன்னுடைய முழு வாழ்க்கையைக் குறித்தும் எழுதச் சொன்னார். நான் நீ வேலை செய்தபோது பார்த்தேன், நீ ஆலயத்திற்கு போனதைப் பார்த்தேன், நீ ஜெபித்த போது பார்த்தேன், உன்னுடைய கோபங்கள், உன்னுடைய பாவங்கள் உன்னுடைய நன்மையான காரியங்கள், தீமையான காரியங்கள் எல்லாம் எழுதப்பட்டன. இப்போது இந்த நித்திய மையைக் குறித்து சொல்கிறேன். நான் எழுதிய இந்த மையில், எந்த காரியங்கள், நீ செய்தவற்றில் நிலையானதோ அது மாத்திரம் நிலைத்திருக்கும், மற்றவை எல்லாம் அழிக்கப்பட்டுப் போகும். உன்னுடைய வாழ்க்கையில் அநேக காலங்கள் அழிக்கப்பட்டு வீணாய் போயிற்று. நான் கர்த்தருக்கு உண்மையாக உன் வாழ்வில் நடந்த எல்லாக் கரியங்களையும் எழுதுகிறேன். இந்த மை எது நித்தியமானதோ அதை மாத்திரம் வைத்துவிட்டு, மற்றதை அழித்து விடும். ஒரு நாள் இந்த புத்தகங்கள் திறக்கப்படும். இந்த நித்திய மையானது, நீ உலகத்தில் செய்த நல்ல காரியங்களை மாத்திரம் வெளிப்டுத்தும். நீ உன் இன்பத்திற்கும் உனக்காகவும் மாத்திரம் வாழ்ந்திருந்தால் அந்த புத்தகத்தின் பக்கங்கள் வெறுமையாக இருக்கும். உண்மையில் சொல்லப் போனால் அந்நாளில் நீ வெட்கத்தினால், முகம் கவிழ்க்கப்பட்டுப் போவாய் கர்த்தருக்கு என்று ஒரு காரியத்தையும் செய்யாமல் போனோமே என்று. நீ பரலோகத்தில் நுழையும் போது இன்னும் அதிகமாக கர்த்தருக்கென்று உழைத்திருக்கலாமே என்று அப்போது நினைத்து, துயரப்படுவாய். உன்னுடைய வாழ்க்கை முழுவதும் இந்த புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தாலும் நீ கர்த்தருக்கென்று என்ன செய்தாயோ அது மாத்திரம் நிலைத்திருக்கும் என்று அந்தத் தூதன் சொன்னபோது நான் கீழே விழுந்து கண்ணீர் விட்டு அழுதேன். நல்ல வேளை நான் இன்னும் மரிக்கவில்லை, கனவில் தான் இருந்தேன். நான் அந்தத் தூதனிடம், 'நீர் போய் கர்த்தரிடம் சொல்லும், நான் எழுந்திரிக்கும்போது நான் என்னை முற்றிலுமாக கர்த்தரிடம் ஒப்புவித்து அவருக்காக நான் வாழ்வேன். நான் பாவ வழியில் இருந்து விலகி பரிசுத்தமாக வாழ்ந்து, என்னால் இயன்ற வரை ஆத்துமாக்களை கர்த்தரிடம் கொண்டு வருவேன். இந்த அழிந்துப் போகிற உலகத்தையே நோக்கமாக கொண்டு வாழாமல், இங்கு காணப்படும் சுகங்களையே நித்தியமாக எண்ணாமல், கர்த்தருக்கு உண்மையாக வாழ்வேன். என் புத்தகத்தை அந்நாளில் கர்த்தர் திறக்கும்போது அவை வெறும் பக்கங்களாக இல்லாமல், அவற்றை நிரப்பத்தக்கதாக என் வாழ்க்கையை நான் வாழ்வேன். நல்லது உண்மையும் உத்தமுமான ஊழியக்காரனே என்று கர்த்தர் என்னை அழைக்கும்படி நடந்துக் கொள்வேன்' என்று கர்த்தரிடம் சொல்லுங்கள்' என்றுக் கூறினேன். (The actual account of a dream) by Craig F. Pitts)
அன்பானவர்களே, நம்மில் எத்தனைப் பேர் நித்தியத்தைக் குறித்த நினைவே இல்லாமல், இந்த உலகத்திற்காகவே வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்! ஜீவ புஸ்தகம் என்று உண்டு நாம் செய்தவை எல்லாம் எழுதப்பட்டிருக்கும் என்ற நினைவே இல்லாமல் பணத்தை சம்பாதிப்பதும் சொத்துக்களை சேர்ப்பதும், கர்த்தருடைய காரியங்ளை செய்வதற்கு வேறு யாரோ இருக்கிறார்கள், நான் எனக்காக, என் குடும்பத்திறகாக வாழ்ந்தால் போதும் என்று வாழ்ந்துக் கொண்டிருக்கிறீர்களா? தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார். - (லூக்கா 12:20). பூமிக்குரியவைகளை அல்ல, மேலானவைகளையே நாடுவோம், தேடுவோம். கர்த்தர் நம்முடைய புத்தகத்தை திறக்கும் அந்நாளில், வெறும் பக்கங்களாக இல்லாமல், அவைகள் முழுவதும் நிரம்பத்தக்கதாக கர்த்தருக்கென்று உழைப்போம் ஆமென் அல்லேலூயா!
ஜீவனுள்ள நாட்களெல்லம் இயேசுவுக்காய் வாழ்வோம்இருப்பதுவோ ஒரு வாழ்வு அதை அவருக்கு கொடுத்திடுவோம்.