I கொரிந்தியர் 15:19 இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்.
இன்றைய கிறிஸ்தவ மண்டலமே இம்மைக்காக மாத்திரமே கிறிஸ்து இயேசுவின் மேல் நம்பிக்கையுள்ளவர்களாக இருப்பதை இன்றைய நாட்களில் நடக்கும் கூட்டங்கள் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்!! ஆசீர்வாத பெருவிழா, அற்புத சுகமளிக்கும் பெருவிழா, வருடாந்தர நற்செய்தி(!!) மற்றும் தெய்வீக சுகமளிக்கும் கூட்டங்கள், தெய்வீக சுகமளிக்கும் மைய்யம், இன்னும் இது போன்ற வித்தியாசமான பெயர்களோடு நடக்கும் ஊழியங்கள்!
இப்பொழுது தேர்வு நேரமாக இருப்பதால், தேர்வு எழுதும் மாணவர்களுக்காக விசேஷ உபவாச ஜெபம், விண்ணப்ப ஜெபம், மன்றாட்டு ஜெபம், முடிந்தவுடன் ஜெப குறுத்தட்டுக்களின் விற்பனை போன்றவைகளையும் பார்க்க முடிகிறது!!
இது போன்ற கூட்டங்களில் வெளிப்படும் ஒரே காரியம், இப்பொழுது சுகம், இப்பொழுது ஆசீர்வாதம், இப்பொழுது பிள்ளை பேறு, இப்பொழுது அது, இப்பொழுது இது என்று அனைத்துமே இப்பொழுதிற்காக நடத்தப்படும் கூட்டங்கள்!! ஆனால் பவுல் சொல்லுகிறார், இப்படி இம்மைக்காக மாத்திரம் கிறிஸ்துவின் பேரில் பற்றுள்ளவர்களாகவும், இந்த பூமியில் வாழும் நாட்களை மாத்திரமே நினைவில் வைத்துக்கொண்டு கிறிஸ்துவின் மேல் நம்பிக்கைவைத்திருப்பவர்களை காட்டிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது!!
நன்மையானது அனைத்தும் ஜோதிகளின் பிதாவிடத்திலிருந்து வருகிறது என்று வேதம் சொல்லுகிறது!! பூச்சக்கரத்து குடிகள் யாவர் மேலும் தேவன் கண்ணோக்கமாக இருக்கிறார் என்கிறது வேதம்!! அப்படி என்றால் இந்த உலகத்தின் தேவைகளை தேவனிடத்தில் கேட்காமலே அவர் அனைவருக்கும் (கிறிஸ்தவர்களுக்கு மாத்திரம் இல்லை, அனைவருக்குமே) செய்து வருவதை நாம் கண்கூடாக காண முடிகிறது, இயேசு கிறிஸ்துவும் அதையே தான் சொல்லுகிறார்,
மத். 6:25. ஆகையால் என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா? 26. ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? 27. கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்? 28. உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்பதைக் கவனித்துப்பாருங்கள். அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை; 29. என்றாலும் சாலொமோன் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன். 30. அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா? 31. ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாதிருங்கள். 32. இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். 33. முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.
ஆனால் இன்றைய ஜெபக்கூட்டங்களும் சரி, அற்புத பெறுவிழாக்களிலும் சரி, எதை தேட வேண்டாம் என்று கிறிஸ்து இயேசு சொன்னாரோ, அதையே தான் பெற்று தருகிறோம் என்று கூவி அழைக்கிறார்கள், இம்மைக்காக மாத்திரம் கிறிஸ்து இயேசுவை நம்புவோர்!! ஆனால் எதை தேடி நாட சொன்னாரோ, அதை சொல்லுவது மறந்திருக்கிறார்கள் இன்றைய ஊழியர்களும் சபைகளும் விசுவாசிகளும்!!