இரட்சிப்பு என்றால் என்ன? வேறு ஒரு மதத்திலிருந்து கிறிஸ்துவ மதத்திற்குள் வருவது தான் இரட்சிப்பா? வேதம் இரட்சிப்பை இப்படி தான் சொல்லுகிறதா? இன்று சில வேறு மத நம்பிக்கை உள்ள நண்பர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவர்களாக மாறுவதால் அவர்கள் இரட்சிக்கப்படுகிறார்கள், என்று பொதுவாக சொல்லப்படுகிறது! இது தான் இரட்சிப்பா??
மரணத்திலிருந்து விடுவிக்கப்படுவதை தான் வேதம் இரட்சிப்பு என்கிறது. ஏனென்றால் மரணம் ஒரு முடிவில்லா நிட்திரையாக இருந்தது, அதை தான் வேதம் சிறை என்றும் சொல்லுகிறது. இந்த மரணத்திலிருந்து விடுவிக்கவே, இரட்சிக்கவே, மீட்கவே இயேசு கிறிஸ்து என்னும் மீட்பர் வந்து எல்லா மனுஷர்களுக்காகவும் தம்மையே மீட்கும் பொருளாக ஒப்புகொடுத்தார் (Ransom for ALL).
I தீமோத்தேயு 2:4. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
6. எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரியசாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது. (correct wordings are; "WILL be testified in due times)
கிறிஸ்துவின் இந்த மீட்கும் பொருளின் பயன் கிறிஸ்தவர்கள் மாத்திரம் இல்லை உலகத்தில் தோன்றிய முதல் மனிதன் முதல், கடைசி மனிதன் வரை பெறுவார்கள். அநேகருக்கு இந்த மீட்கும் பொருளின் வெளிச்சம் இன்னும் கிடைக்காததால், கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதவர்கள் அவியாத அக்கினியில் போவார்கள் என்று நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இது முற்றிலும் தவறான ஒரு போதனையாகும்.
மதங்கள் என்பது மனிதர்களான நாம் வைத்துக்கொண்ட பெயர்களே. இயேசு கிறிஸ்து அப்போஸ்தலர்களை அனுப்பும் போது, சகல ஜாதிகளை (நாடுகளில் உள்ள மக்கள்) சீஷராக்க சொன்னாரே தவிர, கிறிஸ்தவர்களாக்க சொல்லவில்லை. கிறிஸ்தவர்கள் என்பது கிறிஸ்துவை பின் பற்றுபவர்களை அழைப்பதற்காக கொடுக்கப்பட்ட பெயர். (அப்போஸ்தலர் 11:26அவர்கள் ஒரு வருஷகாலமாய்ச் சபையோடே கூடியிருந்து, அநேக ஜனங்களுக்கு உபதேசம்பண்ணினார்கள். முதல்முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக்கிறிஸ்தவர்கள்என்கிற பேர் வழங்கிற்று).
ஆனால் கிறிஸ்தவர்கள் அனைவருமே கிறிஸ்துவை பின் பற்றுபவர்களாக இல்லை என்பதை நாம் கண்கூடாக பார்க்க முடியும். என்னை பின் பற்றுபவன், தன்னையே வெறுத்து சிலுவையை சுமந்து வர சொல்லியிருக்கிறார், அந்த மனிதனே கிறிஸ்துவை உண்மையாக பின் பற்றுபவனாம இருக்க முடியும். ஆனால் இன்று நிலை என்னவென்று நாம் அறிந்திருக்கிறோம்.
ஏதோ கிறிஸ்துவனாக மாறிவிடுவது இரட்சிப்பு என்றும் பரலோகம் செல்வதற்கு உத்திரவாதம் என்றும் அதற்காக ஞானஸ்னானம் என்கிற பாஸ்போர்ட் எடுத்துக்கொண்டு எப்படி வேண்டுமென்றாலும் வாழலாம் என்பது கிறிஸ்துவம் கிடையாது. கிறிஸ்துவின் சிலுவை கிறிஸ்தவர்களுக்கு மாத்திரமில்லை மாறாக உலகத்தில் இருக்கும் அனைவருக்குமே தான். ஆதாமிற்குள் அனைவரும் மரிப்பது போல் கிறிஸ்துவிற்குள் அனைவரும் உயிர்த்தெழுவார்கள். அனைவரும் என்பதன் அர்த்தம் விளக்க வேண்டிய வார்த்தை இல்லை என்றே நினைக்கிறேன்.மரணத்திலிருந்து அனைவருக்கும் இரட்சிப்பு உண்டு என்பது வேதம் நம் அனைவருக்கும் தரும் நம்பிக்கை. கிறிஸ்தவர்களுக்கு அது விசுவாசம்.