இயேசு கிறிஸ்துவின் இராஜ்யத்திற்கும் இந்த பொல்லாத உலகத்தின் ஆளுகைக்கும் ஏராளமான வித்தியாசங்கள் காணப்படும். நீதியை அடிப்படையாகக் கொண்டு இயேசு கிறிஸ்துவின் இராஜ்யம் செயல்படும். ( ஏசா. 11:4 ) அந்த பரிசுத்த ஆளுகைக்கு ஆதாரமாக கிறிஸ்துவும் அவருடைய மண்வாட்டியாகிய சபையும் செயல்படும். ( 1 பேது. 2:9 ) இந்த ராஜாங்கத்தின் நோக்கமே மனித குலத்தை நல்வழிப்படுத்தி பரிசுத்தத்திற்குள் அழைத்துச் செல்வதேயாகும். அவருடைய நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும் பொழுது பூச்சக்கரத்துக் குடிகள் நீதியைக் கற்றுக் கொள்வார்கள். ( ஏசா. 26: 9 ) இந்த ஆளுகையிலே கடல் தண்ணீரால் நிறைந்திருக்கிறது போல பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும். ( ஏசா. 11: 9 ) பூமியின் குடிகளில் சிறியோர் முதல் பெரியோர் வரைக்கும் எல்லோரும் தேவனை அறிந்து கொள்வார்கள். ( எரே. 31:34 ) இந்த ராஜாங்கத்தைக் கொண்டு கர்த்தர் ஜனங்கள் எல்லாரையும் ஒருங்கிணைத்து அவரைத் தொழுது கொள்ள பாஷையை சுத்தமானதாக மாற்றுவார். ( செப். 3: 9) சீயோனிலிருந்து வேதமும் எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும். ( ஏசா. 2:3, 11:9, எரே. 31:34 ) இந்த தேவனுடைய வார்த்தைகளின் மூலமாக தேவ ஞானமானது கிறிஸ்துவின் ஆளுகையிலே பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களைக் கொண்டு மனித குலத்திற்குக் கற்பிக்கப்படும் என்பது தெளிவாகப் புலனாகிறது. இந்த ஆளுகையின் காலத்தில் தற்பொழுது உபயோகத்திலிருக்கும் தொலைத்தொடர்பு வசதிகளையும், நவீன அச்சுக் கலையையும், இனிமேல் கண்டுபிடிக்க இருக்கும் புதிய யுக்திகளையும் உபயோகப்படுத்தி தேவனைப்பற்றிய அறிவை இந்த பூச்சக்கரத்து மக்களுக்குப் போதிப்பார்கள் என்று நம்பலாம். தேவனுடைய வார்த்தையும் சட்ட திட்டங்களும் தெளிவாகவும், உறுதியாகவும் கற்றுத்தரப்படும். எத்தகைய சந்தேகமோ அல்லது குழப்பமோ இல்லாமல் தனி மனிதனின் தேவனுக்கடுத்த கடைமைகள் இன்னது என்றும் அவனுடைய அயலானுக்கடுத்த பொறுப்புகள் இன்னது என்றும் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கும். ஏசாயா தீர்க்கன் இதனைக் குறித்து எழுதும் பொழுது ஒவ்வொருவனும் பூரண சம்மதத்துடன் தேவனைப்பற்றி தெரிந்து கொள்ளவும், அவர் அருளும் ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக் கொள்ளவும் வாஞ்சிப்பான் என எழுதியிருக்கிறார். நம் கர்த்தரின் பர்வதத்திற்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள், அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார். நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள். ( ஏசா. 2 : 3 ) மேலும் ஏசாயா தீர்க்கதரிசி தன்னுடைய புத்தகத்தில் அவர் ராஜ்யபாரம் செய்யும் பொழுது கற்கள் பொறுக்கிப் போடப்பட்டிருக்கும், கோணலானது செவ்வையாக்கப்பட்டு கரடு முரடானவை சமமாக்கப்பட்டு பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு, சகல் மலையும், குன்றும் தாழ்த்தப்படுமென எழுதியிருக்கிறார். ( ஏசா. 40:4, 42:16, 62:10 ) தீர்க்கதரிசி அடையாள பாஷையிலே இந்த ராஜ்யத்திலே நீதிக்கு வரும் தடைகள் நீக்கப்பட்டு பூமியில் தீமையின் ஆளுகை ஒழிக்கப்படும் என்று உணர்த்தி இருக்கிறார். அப்புறப்படுத்தப்படும் மிகப் பெரிய கல் சாத்தானே. இந்த சாத்தான் பூமியின் குடிகளை மோசம் போக்காதபடிக்கு கட்டப்படுவான். ( வெளி. 20: 7 8 ) எல்லா தடைகளும் நீக்கப்பட்டு மனிதனுடைய விரோதிகளும் காணப்பட மாட்டார்கள். ( ஏசா. 35:9 ) மேலும் மனிதனின் தன்னல எண்ணங்கள், விழுந்துபோன அரசியல், மத, சமூக, பொருளாதார நிறுவனங்களின் ஆளுகை நீக்கப்படும். தற்சமயம் காணப்படும் எல்லாவித அதிகாரங்களும் அடையாள மொழியில் கூறப்பட்டுள்ளபடி தீக்கிரையாக்கப்படும் ( 2 பேது. 3 : 10 ). மனித பலவீனத்தை பயன்படுத்தி நடத்தப்படும் எல்லா சமூக விரோத செயல்பாடுகளும் நீக்கப்படும். இன்று நிலவி வரும் தன்னல பொருளாதார கொள்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். இந்த ராஜாங்கத்திலே ஜீவ தண்ணீரும், ஆசீர்வாதங்களும் இலவசமாக எல்லோருக்கும் தரப்படும். ( ஏசா. 55:1, வெளி. 22: 17 ) ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் போகும். யார், யார்மேலும் அதிகாரம் செலுத்த முடியாது. அவனவன் தன் தன் வேலையில் மகிழ்ந்திருப்பான். அவர்கள் விருதாவாக உழைப்பதுமில்லை, அவர்கள் சந்ததி அழிவிற்கு நீங்கலாயிருப்பார்கள். ( ஏசா. 65: 21 23 )
தேசங்களுக்கு இடையே இருந்த பகைகள், வன்முறைகள், விரோதங்கள், பல்வேறு இனங்களின் மத்தியில் இருந்த கசப்புகள், வைராக்கியங்கள் போன்றவற்றிர்க்கு முடிவு வரும். இந்த பரிசுத்த பர்வதமெங்கும் தீங்கு செய்வாருமில்லை, கேடு செய்வாருமில்லை. சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறது போல் பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும். ஏனென்றால் ராஜாங்கம் இயேசு கிறிஸ்துவினுடையதாய் இருப்பதால் என காண்கிறோம். ( ஏசா. 11: 9 ) இயேசு கிறிஸ்துவின் ஆளுகைக்கீழ் மனித சமுதாயம் தங்கள் பட்டயங்களை மண் வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள். ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை. இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை. ( ஏசா. 2:4 ) ஜனக்கள் அழிவிற்கேதுவான தங்களுடைய ஆயுதங்களை சமாதானத்துக்கடுத்த உற்பத்திக்கு உதவும் உபகரணங்களாக மாற்றி தங்களுக்கும், தங்களைச் சார்ந்தவர்களுக்கும் ஆசீர்வாதமாக்குவார்கள். தேவனை நேசிப்பதன் மூலம் சகல மனித குலமும் சமாதானத்துக்கடுததவற்றில் நாட்டம் கொள்ளும். ஏன் மிருகங்களுக்கு இடையே இருக்கும் வன்முறைக்கு ஒரு முடிவு வரும். ஓனாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும். புலி வெள்ளாட்டுக் குட்டியோடே படுத்துக் கொள்ளும். பால சிங்கமும், காளையும் ஒருமித்திருக்கும். ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான். பசுவும், கரடியும் கூடி மேயும். அவைகளின் குட்டிகள் ஒருமித்து படுத்துக் கொள்ளும். சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும். ( ஏசா. 11: 6 7 )