kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆத்துமா!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
ஆத்துமா!!


ஆத்துமா என்றால் என்ன? இந்த ஆத்துமா சரீரத்திற்குள் ஒரு பகுதியா? அல்லது சரீரம் தான் ஆத்துமாவா? ஆத்துமாவிற்கு வடிவம் உண்டா?

இப்படி ஆத்துமாவை குறித்து வேதம் என்ன சொல்லுகிறது என்றும், சபைகள் எப்படி பிரசங்கம் செய்கிறது என்றும் விவாதிக்கும் பகுதி இது. தங்களின் வாதங்களை இந்த தலைப்பை குறித்து மாத்திரமே வைத்தால் விவாதம் நன்றாக இருக்கும்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

"பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்" (எசேக்18:4) ஆத்துமா எதுவானாலும்  அது சாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆத்துமா சாகாது என்று போதிப்பது வேதத்துக்கு முரணானது, கண்டிக்கத்தக்கது.

'என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி' என்று ஆத்துமாவை கேட்டுக்கொள்கிற நாம் அது உண்மையிலேயே ஸ்தோத்தரித்ததா இல்லையா என்று உறுதிப்படுத்துவதே இல்லை.

ஒரு மெத்த‌டிஸ்ட் பிஷப் ஆத்துமாவை இவ்வாறு விளக்கினாராம்:
"ஆத்துமா என்பது உள்ளும் அல்லாத வெளியும் அல்லாத, வடிவம் அல்லது பகுதிகள்ளற்றது, நீங்கள் லட்சக்கணக்கான ஆத்துமாக்களை ஒரு தீப்பெட்டிக்குள் அடக்கிவிட முடியும்". 

இது போலத்தான் இன்றைக்கு தங்களை ஆவியில் நிரம்பியவர்களாகக் காண்பிக்கும் "ஊழியர்கள்" வேத வசனத்தின்படி ஆத்துமா என்ன என்று விளக்கவே மாட்டார்கள், விவாதத்தைத் தவிர்த்துவிடுவார்கள் அல்லது ஓடிப்போய் விடுவார்கள்.

மிகவும் சுவாரசியமான டாபிக் என்பதால் தள அன்பர்கள் தங்கள் மேலான பதிவுகளை பதியலாம் ஆனா
ல் வேத வசனங்களை மேற்கோளாகக் காண்பிக்க வேண்டும்.

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

இது போலத்தான் இன்றைக்கு தங்களை ஆவியில் நிரம்பியவர்களாகக் காண்பிக்கும் "ஊழியர்கள்" வேத வசனத்தின்படி ஆத்துமா என்ன என்று விளக்கவே மாட்டார்கள், தங்களுக்கு "ஆர்வமில்லை" என்று சொல்லி
விவாதத்தைத் தவிர்த்துவிடுவார்கள் அல்லது ஓடிப்போய் விடுவார்கள்.

இதுதான் நடக்கிறதோ?


-- Edited by soulsolution on Monday 11th of January 2010 12:09:47 AM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

முதலில் ஆத்துமா சாகும், ஆத்துமாவையும் ...அழிக்க வல்லவர், போன்ற வசனங்கள் மூலம் ஆத்துமா அழியும், சாகும் என்று மட்டுமே வேதம் சொல்கிறது என்ற சத்தியத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஆத்துமா என்று மொழிபெயர்க்கப்பட்ட சொல் பழைய ஏற்பாட்டில் எபிரேயத்தில் ' நெஃபேஷ்' (Nephesh)     என்ற சொல்லாகும். அதன் அர்த்தம் சுவாசிக்கும் ஜீவராசி என்பதுதான். தேவனுடைய சுவாசத்தை மண்ணான மனித சரீரத்தில் ஊதியபோது மனிதன் உயிரடைந்தான். ஜீவாத்துமாவானான்.

பொதுவாக ஆத்துமா எப்படி உருவாகிறது. தாயின் வயிற்றில் குழந்தை உருவாகிறது, அப்போது அதற்கு தான் யாரென்றே தெரியாது. பிறந்தபின்னும் அதற்கு பெயர் வைத்துக் கூப்பிடுவதால் அது தான் என்று உணர்கிறது. பின்னர் அதற்கு ஏற்படும் அனுபவங்கள், உணர்ச்சிகள் இவையெல்லாம் சேர்ந்துதான் ஒரு 'மனிதன்' ஆகிறான். அதே குழந்தையை காட்டில் கொண்டு போய் விட்டிருந்தால் அது மிருகங்களோடு மிருகமாகத்தான் வளரும். பேசத்தெரியாது, தான் யார் என்றே தெரியாது. இதில் 'ஆத்துமா' எங்கிருந்து வரும்.

மனிதன்தான் ஆத்துமாவேயன்றி மனித சரீரத்துக்குள் ஒரு ஆத்துமா கிடையாது. பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும் என்பதை பாவஞ்செய்கிறவன் சாவான் என்று மொழிபெயர்த்திருந்தால் இக்குழப்பம் வந்திருக்காது. 'the one who sinneth shall die'  என்று சில மொழிபெயர்ப்புகளில் குழப்பமின்றி உள்ளது.

மனித மூளையில் உள்ள பதிவுகள்தான் மனிதனுடைய தனித்துவம். மூளையே செத்துவிட்டால் பின் எதைக் கொண்டு யோசிப்பது? ஆத்துமாவுக்கு மூளை உண்டா என்று வேறு விவாதம் தொடங்க வேண்டிவரும்.

அப்படியென்றால் குறிகாரி கூப்பிட்டு சாமுவேல் ஆவி வந்ததே அது என்ன?
ஐசுவரியவான், லாசரு உவமைக்கு என்ன அர்த்தம்?
இக்காலத்துப் பிரசங்கிமார்கள் போய் கோடா கோடி ஆத்துமாக்கள் நரகத்தில், பாதாளத்தில் சாகவே சாகாமல் வெந்து கொண்டிருல்ப்பதைப் பார்த்துவரும் அனுபவங்கள் எல்லாம் பொய்யா?
சிலுவைக் கள்ளனிடம்" இன்றைக்கே என்னோடு பரதீசிலிருப்பாய்" என்றாரே அது என்ன‌?


போன்ற நியாயமான கேள்விகளூக்கு பின்னர் தெளிவான பதிலைப் பார்க்கலாம்.




__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

soulsolution wrote:

மனிதன்தான் ஆத்துமாவேயன்றி மனித சரீரத்துக்குள் ஒரு ஆத்துமா கிடையாது.  



நான்  என்பது  வேறு   ஆத்துமா   என்பது  வேறு  எந்தை தெளிவு  படுத்தும் வசனங்கள்:   

  
சங்கீதம் 69:10 என் ஆத்துமா வாடும்படி உபவாசித்து அழுதேன்; அதுவும் எனக்கு நிந்தையாய் முடிந்தது.

சங்கீதம் 69:18 நீர் என் ஆத்துமா வினிடத்தில் வந்து அதை விடுதலைபண்ணும்; என் சத்துருக்களினிமித்தம் என்னை மீட்டுவிடும்.

சங்கீதம் 71:10 என் சத்துருக்கள் எனக்கு விரோதமாய்ப் பேசி, என் ஆத்துமாவுக்குக் காத்திருக்கிறவர்கள் ஏகமாய் ஆலோசனைபண்ணி:
 
 
மனிதனைவிட்டு ஆத்துமாவை தனியாக பிரிக்க முடியும் என்பதற்கு கீழ்க்கண்ட வசனம் ஆதாரம்:
 
லூக்கா 12:20 தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார்.


மரணகாலத்தில் அவள் ஆத்துமா பிரியும்போது, அவள் அவனுக்கு பெனோனி என்று பேரிட்டாள்: அவன் தகப்பனோ, அவனுக்கு பென்யமீன் என்று பேரிட்டான்.
தியாகமம் 35:18


கிறிஸ்த்துவினுடைய ஆத்துமா தனி அவரின் மாமிசம் தனி என்பதற்கு மாமிசம் அழியும் ஆத்துமா பாதாளம் போகும் என்பதற்கும்  கீழ்க்கண்ட வசனம் ஆதாரம்

அப்போஸ்தலர் 2:31
அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்னறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான்
 
 
சரீரம் வேறு ஆத்துமா வேறு என்பதற்கு கீழ்க்கண்ட வசனம் ஆதாரம்:
 
I கொரிந்தியர் 7:34 அதுபோல, மனைவியானவளுக்கும் கன்னிகைக்கும் வித்தியாசமுண்டு. விவாகமில்லாதவள் சரீரத்திலும் ஆத்துமாவிலும் பரிசுத்தமாயிருக்கும்படி
 
I தெசலோனிக்கேயர் 5:23 சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக, உங்கள் ஆவி ஆத்துமா சரீரம்முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக
 
 .
ஜன்ம சரீரம் வேறு ஆவிக்குரிய சரீரம்  எனப்படும் ஆத்துமா சரீரம் வேறு என்பதை கீழ்க்கண்ட வசனங்கள் விளக்குகின்றன:   
 
I கொரிந்தியர் 15:44 ஜென்ம சரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்; ஜென்ம சரீரமுமுண்டு, ஆவிக்குரிய சரீரமுமுண்டு.

I கொரிந்தியர் 15:46 ஆகிலும் ஆவிக்குரிய சரீரம் முந்தினதல்ல,
ஜென்மசரீரமே முந்தினது; ஆவிக்குரிய சரீரம் பிந்தினது.

வேதம் முழுவதும் அதற்க்கு சாட்சியான வசனங்கள் அநேகம் உண்டு! புரிய விரும்பாதவர்களுக்கு புரிய வைப்பது மிக கடினம்.
 
ஆவிக்குரிய சரீரம் பித்தியது என்ற வார்த்தைப்படி மனிதன் படைக்கப்பட்டது  ஜன்ம   சரீரத்தில்தான்   பின்னால் அவனுக்கு ஆவிக்குரிய சரீரம் கொடுக்கப்பட்டது.   
  
  -- Edited by RAAJ on Monday 11th of January 2010 01:49:23 PM

-- Edited by RAAJ on Monday 11th of January 2010 01:52:02 PM

__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

நல்ல வசனங்கள், நண்பரே,
But இங்கு ஆத்துமா என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகிறது இதில் 'ஆவி'யைக் கொண்டுவந்து குழப்பவேண்டாம்
.

ஆத்துமாதான் மனிதன் என்பதைத்தான் நீங்கள் காண்பித்துள்ள அத்துனை வசனங்களும் சொல்கின்றன.

'நீங்கள்'வேறு உங்கள் ஆத்துமா வேறென்றால் அது எக்கேடு கெட்டுப்போனால் உங்களுக்கென்ன? தேவன் அதை நரகத்தில் அழிக்கட்டும், உங்கள் ஆத்துமா சாகட்டுமே அதனால் உங்களூக்கென்ன நஷ்டம்?
ஆத்தும ஆதாயம் செய்யவேண்டுமென்று ஒரு ஆளிடம்தானே சுவிசேஷம் சொல்கிறீர்கள், அல்லது ஆத்துமாவிடமா?


சங்கீதம் 69:10 என் ஆத்துமா வாடும்படி உபவாசித்து அழுதேன்; அதுவும் எனக்கு நிந்தையாய் முடிந்தது.

உபவாசித்தால் ஆத்துமா வாடுகிறதா நீங்கள் வாடுகிறீர்களா? ஆத்துமா வாடினால் உங்களுக்கு ஏன் நிந்தை?

சங்கீதம் 71:10 என் சத்துருக்கள் எனக்கு விரோதமாய்ப் பேசி, என் ஆத்துமாவுக்குக் காத்திருக்கிறவர்கள் ஏகமாய் ஆலோசனைபண்ணி:

உங்களுக்கு விரோதமாகப்பேசும் சத்துருக்கள் உங்களைத்தானே கொல்லமுடியும். ஆத்துமாதான் கண்ணுக்கே தெரியாதே அதற்காக ஏன் காத்திருக்கவேண்டும்?

லூக்கா 12:20 தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார்.

"என்னுடையதாகும்" என்று சொல்லவில்லையே ஏன்?
கவனமாக 19ம் வசனத்தை மறந்துவிட்டீகள்.


பின்பு, ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள் சொல்லிக்கொண்டான். லூக்12:19

நீங்கள்தானே புசித்துக் குடிக்கிறீர்கள், நீங்கள்தானே பூரிப்பாகிறீர்கள்;

மரணகாலத்தில் அவள் ஆத்துமா பிரியும்போது, அவள் அவனுக்கு பெனோனி என்று பேரிட்டாள்: அவன் தகப்பனோ, அவனுக்கு பென்யமீன் என்று பேரிட்டான்.
ஆதியாகமம் 35:18


மரணகாலத்தில் அவள் மரிக்கும்போது என்று வாசியுங்கள். சரியாகிவிடும்.

அப்போஸ்தலர் 2:31 அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்னறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான்

இதில் சரீரம் வேறு ஆத்துமாவேறு என்று இல்லவே இல்லையே.

I கொரிந்தியர் 7:34 அதுபோல, மனைவியானவளுக்கும் கன்னிகைக்கும் வித்தியாசமுண்டு. விவாகமில்லாதவள் சரீரத்திலும் ஆத்துமாவிலும் பரிசுத்தமாயிருக்கும்படி

'உடலாலும் மனதாலும் பரிசுத்தமாயிருக்கும்படி' என்று வாசியுங்கள். அல்லது எது சரீர பரிசுத்தம் எது ஆத்தும பரிசுத்தம் என்று விளக்கவும்.

ஜன்ம சரீரம் வேறு ஆவிக்குரிய சரீரம் எனப்படும் ஆத்துமா சரீரம் வேறு என்பதை கீழ்க்கண்ட வசனங்கள் விளக்குகின்றன:

I கொரிந்தியர் 15:44 ஜென்ம சரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்; ஜென்ம சரீரமுமுண்டு, ஆவிக்குரிய சரீரமுமுண்டு.

I கொரிந்தியர் 15:46 ஆகிலும் ஆவிக்குரிய சரீரம் முந்தினதல்ல, ஜென்மசரீரமே முந்தினது; ஆவிக்குரிய சரீரம் பிந்தினது.


இதை நான் 100% ஒத்துக் கொள்கிறேன். ஜென்ம சரீரம் வேறுதான், ஆவிக்குரிய சரீரம் வேறுதான். ஆனால் நாம் இங்கு விவாதிப்பது 'ஆத்துமா' என்றால் என்ன என்றுதான். விவாதத்தைத் திசைதிருப்பவேண்டாம். விட்டால் ஆவியும் ஆத்துமாவும் ஒன்றுதான் என்பீர்கள் போல‌.


இன்னும் நான் ஆத்துமா என்றால் என்ன என்று எழுதவே ஆரம்பிக்கவில்லை. முழுமையாகப் பதித்தால் புரிந்து கொள்வீர்கள்.



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//ஆவிக்குரிய சரீரம் பித்தியது என்ற வார்த்தைப்படி மனிதன் படைக்கப்பட்டது  ஜன்ம   சரீரத்தில்தான்   பின்னால் அவனுக்கு ஆவிக்குரிய சரீரம் கொடுக்கப்பட்டது.//

இதுவும் ஓரளவு உண்மைதான். எல்லா மனிதருக்கும் ஆவிக்குரிய சரீரம் இல்லை. 'கிறிஸ்துவின் சபை'க்கு மட்டும்தான். அதுவும் உயிர்த்தெழும்போதுதான்.





__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

//////மரணகாலத்தில் அவள் மரிக்கும்போது என்று வாசியுங்கள். சரியாகிவிடும்.////
///'உடலாலும் மனதாலும் பரிசுத்தமாயிருக்கும்படி' என்று வாசியுங்கள். ////


வேத வசனங்கள் நமது இஸ்டப்படி மாற்றி படிக்க கொடுக்கப்பட்டவை அல்ல!  வேதத்தில் எந்த ஒரு வார்த்தை சொல்லப்பட்டிருந்தாலும் அதற்க்கு நிச்சயம் ஒரு பொருள் உண்டு.  "இதுதான் அது"  "அதுதான் இது" என்றால் இரண்டு தனிதனி வார்த்தைகளை வேதம் குறிப்பிட வேண்டிய தேவை இல்லை.
 

"எனது ஆத்துமா" "எனது சரீரம்" என்று பிரித்து வேதவசனங்கள் சொல்லும்போது "எல்லாவற்றையும் ஒன்றாக எடுத்துகொள்ளுங்கள்" என்று சொல்வது வேதத்தை எவ்வளவு தூரம்   உங்கள் இஸ்டப்படி வளைக்கிறீர்கள் என்பதை உணர்த்துகிறது.

////அல்லது எது சரீர பரிசுத்தம் எது ஆத்தும பரிசுத்தம் என்று விளக்கவும்.////

"சரீர பரிசுத்தம்" என்பது சரீரத்தால் ஒரு பாவத்தை செய்யாததை குறிக்கும் 
உதாரணமாக ஒரு பொருளை திருடாதது என்று வைத்துகொண்டால்.

"ஆத்துமா பரிசுத்தம்" என்பது மனதாலும் அந்த பொருளை திருட நினைக்காததை குறிக்கும். மனதுக்குள் ஆயிரம் அழுக்கை வைத்துகொண்டு சரீரத்தில் பரிசுத்தமாய் இருப்பதில் பயனில்லை ஏனெனில் இங்கு முக்கியம் ஆத்துமாதான்.  அதைதான் இயேசு கிறிஸ்த்து வெள்ளை அடிக்கப்பட்ட கல்லறைக்கு ஒப்பாக கூறினார்.

(இதெல்லாம் விளக்கி சொல்ல வேண்டிய ஒரு அவல  நிலையில் நாம் இருக்கிறோம்)    


/////'நீங்கள்'வேறு உங்கள் ஆத்துமா வேறென்றால் அது எக்கேடு கெட்டுப்போனால் உங்களுக்கென்ன? தேவன் அதை நரகத்தில் அழிக்கட்டும், உங்கள் ஆத்துமா சாகட்டுமே அதனால் உங்களூக்கென்ன நஷ்டம்?////

" நான்" என்பது ஆவி ஆத்துமா சரீரம் இவற்றை குறிக்கும் கூட்டு சொல். ஆவி ஆத்துமா சரீரம் எல்லாம் சேர்ந்ததுதான் நான்.  "

நான்" என்பதற்குள்  எனது சரீரம் இருக்கிறது , நான் என்பதற்குள் எனது ஆத்துமா இருக்கிறது , நான் என்பதற்குள்  எனது ஆவி இருக்கிறது.  எனது சரீரத்தில் வேதனைபட்டால் என் ஆத்துமாவும் ஆவியும் துக்கப்படும். என் சரீரம் புசித்து திருப்தியானால் என் ஆத்துமாவும் ஆவியும் திருப்தியாகும்.    அதேபோல் என் ஆத்துமா துக்கப்பட்டால் என் சரீரமும் ஆவியும் சோர்ந்துபோகும்.  இப்படி ஒன்றுக்கொன்று தொடர்புடையது அதனால் ஓன்று எக்கேடு கேட்டு போகட்டும் என்று இன்னொன்று இருக்க முடியாது.


இரண்டு  கையும் உடம்பில் வேறு வேறு இடத்தில்தான் இருக்கிறது ஆனால் ஒரு கையில் அடிபட்டால் இன்னொரு கை விட்டுவிடுகிறதா?  அல்லது நீங்கள் வேறு உங்கள் மகன் வேறு என்பதால் மகன் எக்கேடும் கேட்டு போகட்டும் என்று விட்டுவிடுவீர்களா?  இப்படி தனியாக பிரிந்திகுக்கும் மகனையே விட விரும்பாதபோது  எனது ஆத்துமாவையோ  சரீரத்தையோ  ஆவியையோ எப்படி விடமுடியும்?

///உங்களுக்கு விரோதமாகப்பேசும் சத்துருக்கள் உங்களைத்தானே கொல்லமுடியும். ஆத்துமாதான் கண்ணுக்கே தெரியாதே அதற்காக ஏன் காத்திருக்கவேண்டும்?///

ஒன்றும் புரியாத ஒன்னாம் கிளாஸ் பிள்ளை போல உங்கள் கேள்வி இருக்கிறது உங்கள் கேள்வி.  இதற்க்கு என்ன பதில் சொல்ல. சத்துருவாகிய பிசாசுக்கு தேவை நமது சரீரம் அல்லது, அவன் நமது ஆத்துமாவுக்குதான் எப்பொழுதும் கண்ணி வைக்கிறான் ஏனெனில் சரீரம் மண்ணில் புதைக்கப்ப்ட்டவுடன் அழிந்துவிடும்.   எனவே ஒருவன் ஆத்துமாவை பிடித்து செல்வதுதான் சத்துருவின் எண்ணம் அதற்காகத்தான் அவன் காத்திருக்கிறான் என்பதையே அந்த வசனம் உணர்த்துகிறது.   

////பின்பு, ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள் சொல்லிக்கொண்டான். லூக்12:௧௯  நீங்கள்தானே புசித்துக் குடிக்கிறீர்கள், நீங்கள்தானே பூரிப்பாகிறீர்கள்////

இதற்க்கு பதில் முந்தின பாராவில் சொல்லிவிட்டேன்  சரீரம் திருப்தியானால் ஆத்துமா திருப்தியாகும் சரீரம் பசியில் இருந்தால் ஆத்துமா சோர்ந்துபோகும் மனிதன்  சரீரத்தில் இருக்கும்வரை  ஒன்றில் ஓன்று தொடர்புடையது. "

 
//// அப்போஸ்தலர் 2:31 அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்னறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான்இதில் சரீரம் வேறு ஆத்துமாவேறு என்று இல்லவே இல்லையே.////

இந்த வசனத்தில் "ஆத்துமா பாதாளத்தில் விடப்படுவதில்லை" என்றும் "மாமிசம் என்னும் சரீரம் அழிவை காண்பதில்லை" என்றும் தனித்தனியாக  சொல்வது உங்களுக்கு புரியவில்லையா?  புரிந்தால் உண்மை தெரிந்துவிடும்
.

////விட்டால் ஆவியும் ஆத்துமாவும் ஒன்றுதான் என்பீர்கள் போல‌///

சகோதரரே நான் சொல்லாததை கற்பனை பண்ண வேண்டாம். 
"மாமிச சரீரம்" அழிந்தபிறகு "ஆவிக்குரிய சாரீரம்" என்று பவுல் எந்த சரீரத்தை குறிப்பிடுகிறார் என்று நீங்கள்  கருதுகிறீர்கள்?  அது எங்கிருந்து புதிதாக  வருகிறது?    



-- Edited by RAAJ on Monday 11th of January 2010 08:12:43 PM

-- Edited by RAAJ on Monday 11th of January 2010 08:21:45 PM

__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

ரொம்பத்தெளிவான பதில்கள். யாருக்கும் எந்தக் குழப்பமும் வராது. இவ்வளவு தெளிவாக ஆவி என்றால் என்ன, ஆத்துமா என்றால் என்ன, சரீரம் என்றால் என்ன என்று விளக்கியுள்ளீர்கள்.


இதற்க்கு பதில் முந்தின பாராவில் சொல்லிவிட்டேன்  சரீரம் திருப்தியானால் ஆத்துமா திருப்தியாகும் சரீரம் பசியில் இருந்தால் ஆத்துமா சோர்ந்துபோகும் மனிதன்  சரீரத்தில் இருக்கும்வரை  ஒன்றில் ஓன்று தொடர்புடையது. "

ஆனால் சரீரம் செத்துப் போனால் ஆத்துமா சாகாது இல்லையா?
மனிதன் சரீரத்தில் இருக்கும் வரை ... என்ன இது குழப்பம். சரீரமாக இருந்தால்தான் அவன் மனிதல் இல்லாவிட்டால் அவன் பிணம். சரீரமில்லாத மனிதன் உண்டா?

//"சரீர பரிசுத்தம்" என்பது சரீரத்தால் ஒரு பாவத்தை செய்யாததை குறிக்கும் உதாரணமாக ஒரு பொருளை திருடாதது என்று வைத்துகொண்டால்.

"ஆத்துமா பரிசுத்தம்" என்பது மனதாலும் அந்த பொருளை திருட நினைக்காததை குறிக்கும். மனதுக்குள் ஆயிரம் அழுக்கை வைத்துகொண்டு சரீரத்தில் பரிசுத்தமாய் இருப்பதில் பயனில்லை ஏனெனில் இங்கு முக்கியம் ஆத்துமாதான்.  அதைதான் இயேசு கிறிஸ்த்து வெள்ளை அடிக்கப்பட்ட கல்லறைக்கு ஒப்பாக கூறினார்.

(இதெல்லாம் விளக்கி சொல்ல வேண்டிய ஒரு அவல  நிலையில் நாம் இருக்கிறோம்) //  

நன்றாக விளக்கியுள்ளீர்கள். ஆக ஒரு பொருளை திருடாமல் இருந்தால் சரீரம் பரிசுத்தமாகிவிடும். VERY GOOD. மனதுக்குள் ஆயிரம் அழுக்கை வைத்திருந்தால் மனதுதானே (நீங்கள் தானே) பரிசுத்தமில்லாதவராவீர்கள். உங்கள் 'ஆத்துமா' இல்லையே? ஆக உங்களையும் உங்கள் ஆத்துமாவையும் பிரிக்கமுடியாது இல்லையா? எனவே நீங்கள் மரித்தால் உங்கள் ஆத்துமாவும் மரிக்கும். ஏனென்றால் நீங்கள்தான் அந்த ஆத்துமா.


//" நான்" என்பது ஆவி ஆத்துமா சரீரம் இவற்றை குறிக்கும் கூட்டு சொல். ஆவி ஆத்துமா சரீரம் எல்லாம் சேர்ந்ததுதான் நான்.  "

நான்" என்பதற்குள்  எனது சரீரம் இருக்கிறது , நான் என்பதற்குள் எனது ஆத்துமா இருக்கிறது , நான் என்பதற்குள்  எனது ஆவி இருக்கிறது.  எனது சரீரத்தில் வேதனைபட்டால் என் ஆத்துமாவும் ஆவியும் துக்கப்படும். என் சரீரம் புசித்து திருப்தியானால் என் ஆத்துமாவும் ஆவியும் திருப்தியாகும்.    அதேபோல் என் ஆத்துமா துக்கப்பட்டால் என் சரீரமும் ஆவியும் சோர்ந்துபோகும்.  இப்படி ஒன்றுக்கொன்று தொடர்புடையது அதனால் ஓன்று எக்கேடு கேட்டு போகட்டும் என்று இன்னொன்று இருக்க முடியாது.//

ஒன்று எக்கேடு கெட்டுப் போகட்டும் என்று இன்னொன்று இருக்காதபோது, சரீரம் செத்துப் போகும்போது வருத்தத்தில் ஆவியும் ஆத்துமாவும் தற்கொலை செய்து கொள்ளுமோ?


தெளிவாக ஆத்துமா என்றால் என்னவென்று பதிப்பேன் அதுவரை பொறுங்கள்.



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

என்ன சொன்னாலும்  நான் ஏற்கமாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறீர்கள். நல்லது!  
 
ஆத்துமாவையும் சரீரத்தையும் பிரித்து எனக்கு தேவன்தானே உணரவைத்துள்ளார்.  (அதையும் ஏற்க்க மாட்டீர்கள் ஏனெனில் உங்கள் கருத்துப்படி  பவுலுக்கு மட்டும்தான் வெளிப்பாடுகள் விளக்கங்கள் கொடுப்பார் மற்றவருக்கு தேவன் கொடுக்கமாட்டார் அல்லவா?)

அனுபவத்துக்கு முன்னாள் அறிவு எம்மாத்திரம். அனுபவபட்டவர்களுக்கே அதன்  அருமை தெரியும்! மற்றபடி நீங்கள் உங்கள் அறிவை வைத்து என்னதான் விளக்கினாலும் அது பயனற்று போகும். ஒன்றும் தெரியாதவன் வேண்டுமானால் உங்கள் விளக்கத்தை ஏற்றுக்கொள்ளலாம்.  
 
கடவுள் இல்லை என்று வாதிடுபவனும் அவனுக்கு இறைவனை அறியும்அனுபவம் இல்லை என்பதால் அப்படி சொல்கிறான். அதற்கும் இதற்கும்  பெரிய வேறுபாடு  
தெரியவில்லை!
 
நன்றி!    


__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

நிச்சயமாக உணரவைத்திருப்பான், அது எந்த 'தேவன்' என்றும் தெரியும். மகிமையான சுவிசேஷத்தின் ஒளி தெரியாதபடிக்கு மனக்கண்களைக் குருடாக்க பிதாவாகிய தேவனால் நியமிக்கப்பட்ட "இப்பிரபஞ்சத்தின் தேவன்" அவனே.

பிதாவை மனிதர்களை நரக அக்கினியிலிருந்து காப்பாற்ற இயலாத ஒரு கோழையான, தோற்றுப்போன, கையாலாகாத ஒரு தேவனாகக் காண்பிப்பதில் அவன் கில்லாடிதான்.

அதெப்படித்தான் துணிகரமாக தேவன் என்னோடு பேசினார், கிறிஸ்து என்னோடு பேசினார், நான் பரலோகத்தைப் பார்த்தேன், நரகத்தைப்பார்த்தேன் என்று வாய்கூசாமல் பொய் சொல்கிறீர்களோ?
பவுல்க்கு இணையாகக் உங்களைக் கூற தைரியம் வேண்டும். மரணம் என்றால் என்னவென்று தெளிவாகக் கூறமுடியாதவர்கள், ஆத்துமா சாகுமா சாகாதா என்றால் முழியைப்பிதுக்குபவர்கள்,
தேவன் உணர்த்துகிறார் என்று புருடாவிடுவதை நிறுத்திக்கொண்டால் நன்று.

பேசாமல் வேதம் வாசிப்பதையே விட்டுவிடுங்கள். அதுதான் தேவனோடு அளவளாவுகிறீர்களே!





__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

ராஜ் எழுதியது //என் சரீரம் புசித்து திருப்தியானால் என் ஆத்துமாவும் ஆவியும் திருப்தியாகும்.//

இதுதான் வேதப்புரட்டல் என்பது,   "நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள் சொல்லிக்கொண்டான். லூக்12:19

இங்கு "நீ" என்று 'ஆத்துமாவிடம்தான்' சொல்கிறான். ஆக உங்கள் வாதப்படி ஆத்துமா புசிக்கும், குடிக்கும் இல்லையா?


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

சகோ.ஆத்துமா அவர்களே! எனது தளத்தில் உங்கள் பங்களிப்பை நிறுத்திவிட்டாலும், உங்களோடு இங்கு தொடர்புகொள்வதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.

“மனிதன், ஆத்துமாவா? மனிதனுக்குள் ஆத்துமாவா?” எனும் திரியில் கூறப்பட்டுள்ள விஷயங்களைப் படித்து புதிதாக சில விஷயங்களைத் தெரிந்துகொண்டேன். கூடவே சில கேள்விகளும் எழும்பியுள்ளன.

soulsolution wrote in மனிதன், ஆத்துமாவா? மனிதனுக்குள் ஆத்துமாவா? :
//ஒவ்வொருவரையும் கடவுளே படைக்கிறார் என்பது உண்மையானால், பாவம், குழப்பம், அபூரணம் இவற்றுக்கெல்லாம் அவரே நேரடிக் காரணராகிவிடுவார். மாறாக "அவருடைய கிரியை உத்தமமானது" என்று வேதாகமம் விளம்புகிறது. (உபா 32:4). மனரீதியாகவும், உடல், ஒழுக்கரீதியாக குறைவுள்ள அங்ககீனங்களோ, பலவீனமோ, குறைபாடுள்ள எந்தப் பிறவியும் தேவனால் படைக்கப்பட்டதாய் இருக்க முடியாது. இவர்கள் பூரணமான ஆதாமின் விழுகைக்குப் பின்னால் பல காலமும், பல பாவங்களின் தொகுப்பினாலும் விபத்துகள் போல வந்து நேர்ந்த விபரீதப்பிறப்புகள். பரிபூரணமாக சிருஷ்டிக்கப்பட்ட ஆதாமை மட்டுமே தேவன் தனது பொறுப்பில் படைத்தார். தேவனே ஒவ்வொரு குழந்தையின் பிறப்புக்கும் பொறுப்பாளி என்பவர்கள், ஒவ்வொரு பிறவிக்கோளாருக்கும், அங்ககீனத்திற்கும், பைத்தியத்திற்கும் தேவனையே பொறுப்பாளியாக்குகிறார்கள்.//

இப்பகுதியில் எனக்கு 2 கேள்விகள் உள்ளன.

1. பெண்கள் கர்ப்பமடைதல் கர்ப்பமடையாதிருத்தல் எனும் இவ்விரு காரியங்களிலும் தேவன் நேரடியாகச் செயல்படுவதாக பல வசனங்கள் கூறுகின்றன. ஊனமுற்ற மனிதனையும் தேவனே உண்டாக்குவதாகவும் வசனங்கள் கூறுகின்றன.

ஆதியாகமம் 16:2  சாராய் ஆபிராமை நோக்கி: நான் பிள்ளைபெறாதபடிக்குக் கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார்; என் அடிமைப்பெண்ணோடே சேரும், ஒருவேளை அவளால் என் வீடு கட்டப்படும் என்றாள்.

ஆதியாகமம் 25:21 மலடியாயிருந்த தன் மனைவிக்காக ஈசாக்கு கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தான்; கர்த்தர் அவன் வேண்டுதலைக் கேட்டருளினார்; அவன் மனைவி ரெபெக்காள் கர்ப்பந்தரித்தாள்.

ஆதியாகமம் 30:2 அப்பொழுது யாக்கோபு ராகேலின்மேல் கோபங்கொண்டு: தேவனல்லவோ உன் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார், நான் தேவனா? என்றான்.

உபாகமம் 28:4 உன் கர்ப்பத்தின் கனியும், உன் நிலத்தின் கனியும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளுமாகிய உன் மிருகஜீவன்களின் பலனும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்.

யாத்திராகமம் 23:26 கர்ப்பம் விழுகிறதும் மலடும் உன் தேசத்தில் இருப்பதில்லை; உன் ஆயுசுநாட்களைப் பூரணப்படுத்துவேன்.

யாத்திராகமம் 4;11 அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்? ஊமையனையும் செவிடனையும் பார்வையுள்ளவனையும் குருடனையும் உண்டாக்கினவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவா?


இவ்வசனங்கள் உங்களின் கருத்துக்கு எதிராக உள்ளனவே?

2. ஒவ்வொரு மனிதனையும் கடவுளே படைக்கிறார் என்பது உண்மையானால், பாவம், குழப்பம், அபூரணம் இவற்றுக்கெல்லாம் அவரே நேரடிக் காரணராகிவிடுவார் என்கிறீர்கள். உங்கள் கூற்றுப்படி ஆதாம் தேவனால் படைக்கப்பட்டவன்தானே, அவ்வாறெனில் ஆதாமின் பாவத்திற்கு தேவன் நேரடிக் காரணம் என்று சொல்லலாமா?


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

சகோதரருக்கு மீண்டும் வந்தனங்கள். உங்கள் கேள்விகளுக்கு நன்றி.

என்னாலியன்றவரை பதிலளிக்க முயல்கிறேன். நான் மேற்கண்ட தலைப்பில் பதிவது தேவனுடைய உண்மையான ஊழியன் என்று சொல்லிக்கொள்வதற்கு முற்றிலும் தகுதியுள்ள ஒருவருடைய புத்தகத்தின் மொழிமாற்றமே. கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் பழமையானது. அதில் எந்த முரண்பாடும் இல்லாததால், வேதத்துக்கு இசைவானதாக இருப்பதால் அதை பதிகிறேன்.
உங்கள் முதல் கேள்விக்கு,

தேவன் சகலத்துக்கும் காரணராக இருக்கிறார் என்று ஏற்கனவே சகலமும் தேவ சித்தம் என்றெழுதியுள்ளது உங்களுக்கு நினைவுக்கு வரலாம். அதில் எந்த மாற்றமும் இல்லை. இங்கு "நேரடியாக" அவர் காரணமாவதில்லை என்ற கருத்தைத்தான் ஆக்கியோன் கூறுவதாக நான் நம்புகிறேன்.

யாத்திராகமம் 4;11 அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்? ஊமையனையும் செவிடனையும் பார்வையுள்ளவனையும் குருடனையும் உண்டாக்கினவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவா?

என்ற பகுதியில் உண்டாக்கினவர் நான் என்று அவர் பொறுப்பேற்கிறார் என்றே நான் எண்ணுகிறேன். எல்லாம் அவர் சித்தப்படி நடந்தேறுகிறது என்பதற்கு நீங்கள் பதித்த அனைத்து வசனங்களுமே சான்று. தீமை என்ற ஒரு விஷயத்தின் மூலம் மனிதன் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஒரு உன்னத நோக்கத்தின் நிமித்தமே சகலமும் அவர் அனுமதீன் பேரில் நடக்கிறது. ஆகையால்தான் வரப்போகும் இராஜ்ஜியத்தில் இத்தகையோர் இருக்கமாட்டார்கள் என்று "அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம். அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்...: ஏசாயா 35:5, 6. வாக்குப்பண்ணியுள்ளார். அத்தகைய மகத்தான ஒரு ராஜ்ஜியம் பூமியில் நிரந்தரமாக ஸ்தாபிக்கப்படப் போவதால் இக்காலத்துப் பாடுகள் இனிவரும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவை அல்ல என்று கொள்ளலாம்.

இரண்டாவது கேள்விக்கு என் பதில்

ஆம். தேவன்தான் காரணம். அதனால்தான் பரிகாரத்துக்கு அவர் ஆதாமை பொறுப்பாளியாக்காமல் தானே பொறுப்பெடுத்து தனது ஒரே பேறான குமாரனை இரண்டாம் ஆதாம் ஆக தோன்றச்செய்து அந்தப் பாவத்தைப் போக்கினார்.


-- Edited by soulsolution on Sunday 21st of February 2010 10:26:55 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

soulsolution wrote:
//தேவன் சகலத்துக்கும் காரணராக இருக்கிறார் என்று ஏற்கனவே சகலமும் தேவ சித்தம் என்றெழுதியுள்ளது உங்களுக்கு நினைவுக்கு வரலாம். அதில் எந்த மாற்றமும் இல்லை. இங்கு "நேரடியாக" அவர் காரணமாவதில்லை என்ற கருத்தைத்தான் ஆக்கியோன் கூறுவதாக நான் நம்புகிறேன்.//

சகோ.ஆத்துமா அவர்களே! உங்கள் கருத்துக்கும் “கட்டுரை ஆக்கியோன்” கருத்துக்கும் வேறுபாடு இருப்பதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. கர்ப்பம் உருவாவது, உருவாகாதிருப்பது, மோசேயை திக்குவாயனாகப் படைத்தது எல்லாம் தேவனின் நேரடிக் கட்டுப்பாட்டின்படி நடப்பதாகத்தான் வசனங்கள் கூறுகின்றன. அப்படி அல்ல, என “கட்டுரை ஆக்கியோன்” கூறினால் அது தவறான கருத்தாகத்தான் இருக்கமுடியும்.

“கட்டுரை ஆக்கியோன்” wrote:
//அப்படி ஒவ்வொருவரையும் கடவுளே படைக்கிறார் என்ப்து உண்மையானால், பாவம், குழப்பம், அபூரணம் இவற்றுக்கெல்லாம் அவரே நேரடிக் காரணராகிவிடுவார்.//

ஒரு மனிதனை தேவன் படைப்பதால், அம்மனிதனின் அனைத்து செயல்களுக்கும் தேவனே பொறுப்பாகிறார் எனும் தவறான கருத்தை “கட்டுரை ஆக்கியோன்” கொண்டிருப்பதால்தான், பாவமுள்ள ஒரு மனிதனின் படைப்புக்கு தேவன் “நேரடியாகக்” காரணமாவதில்லை எனும் மழுப்பலான கருத்தைச் சொல்லவேண்டியதாகிறது. அதாவது வேதத்துக்கு புறம்பான ஒரு தவறான கருத்தை நம்புவதால்தான், வசனங்கள் நேரடியாகக் கூறுகிற கருத்துக்களுக்கு மழுப்பலான விளக்கங்களைக் கொடுக்கவேண்டியதாகிறது.

வேதவசனங்களின்படி நான் அறிந்த எனது கருத்தைச் சொல்கிறேன். அது எல்லா வசனங்களுக்கும் பொருந்துகிறதா என்பதை சரிபாருங்கள்.

ஆதாமை குறைவற்ற மனிதனாக (அதாவது பூரணனனாகத்தான்) தேவன் படைத்தார். ஆனால் ஆதாம் தவறு செய்வதற்கான சுயாதீனத்தையும் தேவன் கொடுத்திருந்தார். அதாவது, குறைவற்றவனாகப் படைக்கப்பட்ட ஆதாம், தன்னைத்தானே குறைவுள்ளவனாக ஆக்கிக்கொள்ளும் சுயாதீனத்தையும் தேவன் கொடுத்திருந்தார். எனவே தேவனின் படைப்பில் குறைவில்லை; தன் சுயாதீனத்தை தவறு செய்வதற்கு ஆதாம் ஒப்புக்கொடுத்ததால், அவர் குறைவுள்ளவரானார். இதற்கு தேவன் பொறுப்பல்ல.

உண்மையில் ஆதாமுக்கு தேவன் சுயாதீனத்தைக் கொடுத்ததன் நோக்கம் அவன் தவறு செய்வதற்காக அல்ல. அந்த சுயாதீனத்தைப் பயன்படுத்தி அவன் தவறுக்கு விலகவேண்டும் எனபதற்காகவே. அதாவது தவறுசெய்ய அவனுக்கு சுயாதீனம் இருந்த போதிலும், அவன் தவறு செய்வதை விலக்கி, தன்னைக் குறைவற்றவனாக நிரூபித்துக்காட்டி, அதற்கான பரிசை (அதாவது நித்திய ஜீவனை) அவன் பெறவேண்டுமென்பதே தேவனின் நோக்கம்.

ஆனால் சாத்தானின் வஞ்சகத்தால் பாவத்தில் விழுந்த ஆதாம், மரணத்தைச் சந்திக்க வேண்டியதாயிற்று. ஆதாம் மட்டுமின்றி, அவரது சந்ததியினரான அனைவரும் மரணத்தைச் சந்திக்க வேண்டியதாயிற்று. ஆதாமின் பாவத்தால் அவரது சந்ததியினருக்கு 2 தீமையான விளைவுகள் உண்டாயின.

1. ஒவ்வொருவரின் ஜென்ம சுபாவத்திலும் பாவம் இருந்தது; அதாவது சாத்தானின் ஆளுகை இருந்தது. எனவே பாவம் செய்யக்கூடாது என அவர்கள் நினைத்தால்கூட அதை செயல்படுத்த முடியாத பரிதாப நிலைக்கு ஆளாயினர் (ரோமர் 7:14-25).

2. பாவத்தில் பிறந்து ஜீவிக்கும் மனிதன், தேவனுக்குக் கீழ்ப்படிய வாஞ்சித்து, அவரது கற்பனைகளைக் கைக்கொண்டால்கூட, அவன் மரிக்கவேண்டியதாகவே இருந்தது. அதாவது தேவனுக்குக் கீழ்ப்படிவதன் பலனாகிய நித்திய ஜீவனைப் பெறுகிற வாய்ப்பில்லாதவனாக இருக்க வேண்டியதாயிருந்தது.

அதாவது யாரோ ஒருவர் (ஆதாம்) செய்த பாவத்தின் விளைவாக, தேவனுக்குக் கீழ்ப்படிய மனமுள்ளவனும் நித்திய ஜீவனை இழக்கவேண்டியதானது.

இந்நிலைக்கு அந்த மனிதனும் பொறுப்பல்ல, அவனைப் படைத்த தேவனும் பொறுப்பல்ல, அவனின் முற்பிதாவாகிய ஆதாமே பொறுப்பு.

இப்படி ஆதாமின் பாவத்தால் அனைத்து மனிதரும் நித்திய ஜீவனை இழப்பதை விரும்பாத தேவன், மனிதன் மீது கொண்ட அன்பினால், மிகுந்த கிருபையுள்ள அவர், மனிதனை மரணத்திலிருந்து (ஆதாமின் பாவத்தால் வந்த மரணத்திலிருந்து) விடுவித்து, அவன் நித்தியஜீவனைப் பெறுவதற்கான வாய்ப்பைக் கொடுக்க சித்தங்கொண்டார். எனவேதான் தமது ஒரேபேறான குமாரனாகிய இயேசுவை இப்பூமிக்கு அனுப்பி, அவரது மரணத்தின் மூலம் மனிதனின் பாவங்களுக்கு நிவாரணம் செய்து, ஆதாமால் வந்த மரணத்திலிருந்து அவனை விடுவித்து, அவன் நித்திய ஜீவனைப் பெறுவதற்கான வாய்ப்பை உருவாக்கினார்.

இங்கு நீங்கள் ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனிக்கவேண்டும். இயேசுவின் பலியால் ஆதாமின் சந்ததியினரான நாம் பெறுவது, நித்தியஜீவனைப் பெறுவதற்கான வாய்ப்பு மட்டுமே. இந்த வாய்ப்பு எல்லா மனிதருக்கும் கிடைப்பதால், இந்த வாய்ப்பை உருவாக்கிய இயேசுவின் பிறப்பு எல்லாருக்கும் நற்செய்தியாக இருந்தது/இருக்கிறது.

அதாவது, ஆதாமின் பாவத்தால் நித்திய ஜீவனைப் பெறுவதற்கான வாய்ப்பை முழுமையாக இழந்து மரணத்தில் நிலைகொண்டிருந்த மனிதர்களுக்கு, இயேசுவின் பலி வரப்பிரசாதமானது. ஆம், ஆதாமின் பாவத்தால் வந்த மரணத்திலிருந்து மீட்கப்பட்டு, உயிரடைவதற்கான வாய்ப்பை எல்லா மனிதர்களும் பெற்றனர். எனவேதான் இயேசுவின் பிறப்பு எல்லா மனிதர்களுக்கும் நற்செய்தியானது.

இந்த உயிரடைதலுக்கு யாருடைய கிரியையும் காரணமல்ல. எனவேதான் “நாம் கிருபையினால் நீதிமான்களாக்கப்பட்டோம், இதைக் குறித்து மேன்மை பராட்டும்படி இது நம் கிரியைகளினால் வந்ததல்ல” என மீண்டும் மீண்டும் பவுல் கூறுகிறார்.

ஆனால், இத்தோடு எல்லாம் முடியவில்லை. தேவகிருபையினால் மரணத்திலிருந்து மீட்கப்பட்டு (அல்லது இரட்சிக்கப்பட்டு) உயிரடைந்த மனிதன் நித்திய ஜீவன் எனும் பரிசைப் பெறவேண்டுமெனில், அதற்கு அவன் ஒரு தகுதியை அடைந்துதான் ஆகவேண்டும். ஆதாமுக்கு தேவன் எப்படி ஒரு நிபந்தனையைக் கொடுத்தாரோ அதேவிதமாகத்தான் எல்லா மனிதருக்கும் தேவன் ஒரு நிபந்தனையைக் கொடுத்துள்ளார். அதுதான் கீழ்ப்படிதல்.

ஆதாமிடம் நடுமரக் கனியைச் சாப்பிட வேண்டாம் எனும் ஒரு கட்டளையை மட்டும் கொடுத்தார். மற்றவர்களில் ஒருபகுதியினருக்கு கற்பனைகள் மூலம் உண்டான நியாயப்பிரமாணத்தையும் ஏனையோருக்கு மனச்சாட்சியின் மூலம் உண்டான நியாயப்பிரமாணத்தையும் கொடுத்தார் (ரோமர் 2:9-16).

இவ்வுலகிலேயே இப்பிரமாணங்களின்படி நடப்பவர்கள், தேவவாக்கின்படி (மத்தேயு 19:16; லூக்கா 10:25-28) நித்தியஜீவன் எனும் பரிசைப் பெறுவதற்கு தகுதி பெற்றுவிடுகின்றனர்.

இவ்வுலகில் அப்பிரமாணங்களின்படி நடவாதவர்களில் 2 பிரிவினர் உள்ளனர். 1. பிரமாணங்களின்படி நடக்க பிரயாசப்பட்டு தோல்வியுற்றவர்கள், 2. பிரமாணங்களின்படி நடக்கப் பிரயாசப்படாதவர்கள்.

இவ்விரு பிரிவினரில் முதல் பிரிவினர் கிறிஸ்துவின் 1000 வருட ராஜ்யத்தின் பிரஜைகளாகி நீதியைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நீதியைக் கற்றவர்கள், ஆதியில் ஆதாம் இருந்த பூரண நிலையில் இருப்பார்கள். இவர்களுக்கு 1000 வருட முடிவில் கட்டவிழ்த்துவிடப்படும் சாத்தானால் ஒரு சோதனை உண்டாகும். சோதனையில் ஜெயிப்பவர்கள் நித்திய ஜீவனைப் பெறுவார்கள். தோற்பவர்கள் (கிருபையாய் கிடைத்த) ஜீவனை இழந்து மரிப்பார்கள். “அவனவன் (ஆதாமின் அக்கிரமத்தினால் அல்ல) தன் தன் அக்கிரமத்தினிமித்தமே சாவான்” எனும் வசனத்தின்படியே நடக்கும்.

2-வது பிரிவினர் 1000 வருட அரசாட்சியின் பிரஜையாவார்களா இல்லையா என்பதற்கான தெளிவான வசன ஆதாரம் எனக்குக் கிடைக்கவில்லை. ஒருவேளை 1000 வருட அரசாட்சியின் பிரஜைகளானால், மேலே முதல் பிரிவினருக்குக் கூறப்பட்டபடியே இவர்களுக்கும் நடக்கும். அல்லது நேரடியாக அக்கிரமக்காரரெனத் தீர்க்கப்பட்டு (கிருபையாய் கிடைத்த) ஜீவனை இழந்து மரிப்பார்கள். “அவனவன் (ஆதாமின் அக்கிரமத்தினால் அல்ல) தன் தன் அக்கிரமத்தினிமித்தமே சாவான்” எனும் வசனம் இவர்களுக்கும் பொருந்தும். ஏனெனில், இவர்கள் தேவப்பிரமாணத்திற்கு கீழ்ப்படிந்து நடக்க பிரயாசப்படவில்லையே!

இந்த 1000 வருட அரசாட்சி காலத்தில், இயேசுவைக் குறித்தும் போதிக்கப்படும். இவ்வுலக வாழ்வில் இயேசுவை அறியாதவர்களும் அறிந்து விசுவாசியாதவர்களும் அப்போது இயேசுவை ஏற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கப்படும். அப்போதுகூட இயேசுவை ஏற்க மனதில்லாதவர்கள் (கிருபையாய் கிடைத்த) ஜீவனை இழந்து மரிப்பார்கள். இவ்விதமாக, இவர்களுக்கும் “அவனவன் (ஆதாமின் அக்கிரமத்தினால் அல்ல) தன் தன் அக்கிரமத்தினிமித்தமே சாவான்” எனும் வசனத்தின்படியே நடக்கும்.

1000 வருட அரசாட்சியின் நியாயத்தீர்ப்புக்கு ஆதாரமாக நான் எடுத்துக்கொண்ட பிரதான வசனங்கள்: ஏசாயா 11:3-10; 26:9,10; 65:20-25; மல்கியா 3:2; வெளி. 20-ம் அதிகாரம்.

ஒருசில குறிப்பிட்ட வசனங்களை மட்டுமே வைத்து எடுக்கும் முடிவு சரியானதாக இருக்காது. அனைத்து வசனங்களையும் ஒருங்கிணைத்து, எந்த வசனத்தின் கருத்தும் பாதிக்கப்படாதபடி எடுக்கிற முடிவுதான் சரியாக இருக்கும். நான் முடிந்த அளவு வசனங்களை ஒருங்கிணைத்து என் கருத்தை வைத்துள்ளேன். அக்கருத்து ஏதேனும் ஒரு வசனத்திற்கு அப்பட்டமாக எதிராயிருந்தால் கூறுங்கள்.

மரணம், ஆத்துமா பற்றி உங்கள் திரிகளில் கூறப்பட்ட கருத்துக்கள், இதுவரை பார்த்தவரை ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே உள்ளது.

மனிதனின் 2-ம் மரணத்தை உங்களால் ஏற்கமுடியாததால்தான் எனது பல கருத்துக்களுடன் நீங்கள் முரண்படுகிறீகள்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

சகோதரர் அவர்களே, மீண்டும் உங்கள் பதிவுகளுக்கு நன்றி,

ஆதாமினால் எப்படி பாவம், மரணம் என்பவைகள் எல்லாரையும் ஆட்கொள்கிறதோ (அவர்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும்) அதேபோல இரண்டாம் ஆதாமாகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் பாவமன்னிப்பும், நித்திய ஜீவனும் உண்டாயிற்று என்று அநேக வசனங்கள் கூறுவதை ஏன் உங்கள் கண்கள் காண்பதில்லை என்பது எனக்கு புதிராகவே இருக்கிறது. உயிர்த்தெழுதல் 100% எல்லாருக்கும் உண்டு என்பதில் உங்களுக்கு இன்னும் சந்தேகமா?

'மழுப்பலான பதில்' நீங்கள்தான் சொல்கிறீர்கள். குறைவற்ற மனிதனாகத்தான் ஆதாமைப் படைத்தார், ஆனாலும் குறைவுள்ளவனாகிப்போனான் என்பது ஏற்புடையதல்ல. ஆதாம் பாவம் செய்ததனால் அவர் குறைவுள்ளவனானான் என்று சொல்வது தேவனுடைய செயல்பாட்டைக் குறைகூறுவதாகும். ஆதாமுக்கு தவறு செய்வதற்கான சுயாதீனத்தைக் கொடுத்தார் என்பதைவிட சாத்தானை அனுமதித்து தவறு செய்ய வைத்தார் (திட்டத்தின் ஒரு பகுதி) என்பதே சரி. In fact யாருமே குறைவுள்ளவர்கள் அல்ல. தீமைக்கு ஆட்படுத்தி எல்லாரையும் பூரணமாக்கும் தேவ திட்டத்தின் அருமையைப் புரிந்துகொள்ளாததனால்தான் இத்தகைய குழப்பங்கள்.

எல்லாரும் பாவம் செய்து...., நமக்குப் பாவமில்லை என்போமானால்...., நீதிமான் ஒருவனாகிலும் இல்லை... போன்ற வசனங்கள் நம் நிலையை எடுத்துரைக்கின்றன.

வஞ்சிப்பதற்கு சர்ப்பமே இல்லாத ஒரு ஏதேனை நினைத்துப்பாருங்கள். அதேபோல்தான் 1000 வருட யுகத்திலும் நடக்கும். மீண்டும் நீங்கள் சொல்லும் 'கற்பனைகள்' கைக்கொள்ள தேவன் முன்குறிக்காத யாரும் அவைகளைக் கைக்கொள்ள பிரயாசப்பட்டாலும் தோல்வியடைவார்கள். ஏனென்றால் அவர்கள் அவிசுவாசத்திற்கென்றே நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். மாற்கு 4:11,12. வேதம் அவர்களுக்கு புரிய வேண்டிய அவசியமே இல்லை. 

ஒரு மனிதனின் செயல்களுக்கு தேவன் பொறுப்பில்லை என்றால் தேவனை விட மனிதன் உயர்ந்துவிடுகிறான். அதாவது தேவனுடைய திட்டத்துக்கு, சித்தத்துக்கு மாறான காரியங்களைச் செய்து தேவனுடைய 'சர்வ வல்லமையை' கேள்விக்குரியதாக ஆக்க மனிதனால் முடியும் என்று நீங்கள் சொல்வது ஏற்புடையதன்று. அவ்வாறு இருக்கும் பட்சம் தேவன் கையாலாகாதவராகிவிடுவார். 

"அந்த சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல், கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது." ரோமர் 8:21

சுய இஷ்டம் என்று ஒன்றுமே இல்லை சகோதரரே, சகலமு
ம் அவரது 'இஷ்டப்படி' தான் நடக்கிறது. இதில் நாம் பெருமைபாராட்ட ஒன்றுமே இல்லை. கனத்துக்குரிய பாத்திரம் (Character), கனவீனமான பாத்திரம் இவைகளைச் செய்வது குயவன் (director)   தான் இதில வில்லன் பாத்திரம் கதாநாயகனாக மாற முடியாது, என்னதான் பிரயாசப்பட்டாலும்... அது சரியாகவும் இருக்காது.

மேலும் கிறிஸ்துவின் பலியினால் நாம் பெறுவது 'நித்திய ஜீவனுக்கான வாய்ப்பு' என்று கூறுவது வசனத்தில் இல்லாதது. ஆதாமினால் நாம் பெற்றது பாவம் செய்யும் வாய்ப்பு அல்ல, மரணம் என்ற தண்டனை. அதேபோல "பாவத்தின் சம்பளம் மரணம்(மரிக்கும் வாய்ப்பு அல்ல); தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்(வாய்ப்பு அல்ல)" ரோமர்6:23.

நீங்கள் எழுதியது,

/ஆனால், இத்தோடு எல்லாம் முடியவில்லை. தேவகிருபையினால் மரணத்திலிருந்து மீட்கப்பட்டு (அல்லது இரட்சிக்கப்பட்டு) உயிரடைந்த மனிதன் நித்திய ஜீவன் எனும் பரிசைப் பெறவேண்டுமெனில், அதற்கு அவன் ஒரு தகுதியை அடைந்துதான் ஆகவேண்டும். ஆதாமுக்கு தேவன் எப்படி ஒரு நிபந்தனையைக் கொடுத்தாரோ அதேவிதமாகத்தான் எல்லா மனிதருக்கும் தேவன் ஒரு நிபந்தனையைக் கொடுத்துள்ளார். அதுதான் கீழ்ப்படிதல்./


எல்லாமனிதருக்கு தேவன் நிபந்தனையைக் கொடுத்திருக்கிறார் என்பதற்கு வசனம் காண்பியுங்களேன். ஒரு வசனம் கூட இல்லை. எல்லாரையும் 'கீழ்ப்படியாமைக்குள் (அவரே) அடைத்துப்போட்டார்' என்றுதான் நண்பரே வசனம் சொல்கிறது.

"ஒரே தரம் மரிப்பதும் பின்பு (உயிரோடு எழுந்து) நியாயத்தீர்ப்படைவதும் மனிதனுக்கு(எல்லா) நியமிக்கப்பட்டுள்ளது." இங்கு ஒரே தரம் என்பது ஒரே தரம்தான் என்று நான் கிரேக்க மொழியிலும் சரிபார்த்துவிட்டேன் அதின் அர்த்தம் only once, once for all என்றுதான் உள்ளது.

எனக்குத் தெரிந்து இவ்வுலகில் ஒரே ஒரு பிரிவினர்தான் உள்ளனர். 'பாவிகள்' என்ற பிரிவு. இந்தப் பிரிவினருக்காகவே கிறிஸ்துஇயேசு உலகத்திற்கு வந்தார் என்று வசனம் கூறுகிறது. வந்த காரணத்தை அவர் மிகச்ச்ரியாக நிறைவேற்றிவிட்டார். ஆகவே 'பாவிகள்' நீதிமான்களாகிறார்கள், நித்திய ஜீவனை சுதந்தரிக்கிறார்கள். இது கிரியைகளினால் உண்டானதல்ல, கிருபையால் உண்டான தேவ ஈவு. இதைப் புரிந்துகொண்டால் மட்டுமே நம்முடைய சுயநீதிகளிலிருந்து வெளியே வர இயலும்.


இரண்டாம் மரணத்துக்கு யார் தகுதியாவார்கள் என்பதை நாம் முதல் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தபின் விவாதிக்கலாம் என்று எண்ணுகிறேன்.






__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

soulsolution wrote:
//இரண்டாம் மரணத்துக்கு யார் தகுதியாவார்கள் என்பதை நாம் முதல் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தபின் விவாதிக்கலாம் என்று எண்ணுகிறேன்.//

அப்போது விவாதித்தாலும் இப்போது சொல்வதைத்தான் நாம் சொல்வோம். இறுதி நியாயத்தீர்ப்பின்போதுதான் யார் சொல்வது சரி என்பது தெரியும்.

soulsolution wrote:
//வஞ்சிப்பதற்கு சர்ப்பமே இல்லாத ஒரு ஏதேனை நினைத்துப்பாருங்கள். அதேபோல்தான் 1000 வருட யுகத்திலும் நடக்கும்.//

சர்ப்பம் இல்லாவிட்டால் ஆதாம் பாவத்தில் விழுந்திருக்க மாட்டான் என்பதற்கு உத்தரவாதம் உண்டா? அப்படி எதுவும் வசனம் இருப்பதாகத் தெரியவில்லை.

அவ்வாறே சாத்தான் இல்லாத 1000 வருட யுகத்தில் மனிதர்கள் பாவம் செய்யமாட்டார்கள் என்பதற்கு உத்தரவாதம் உண்டா? நிச்சயமாக இல்லை. சாத்தான் இல்லாத அந்த 1000 வருட யுகத்திலும் பாவம் செய்பவர்கள் உண்டு என்றுதான் வசனம் கூறுகிறது.

ஏசாயா 65:20 அங்கே இனி அற்ப ஆயுசுள்ள பாலகனும், தன் நாட்கள் பூரணமாகாத கிழவனும் உண்டாயிரார்கள்; நூறு வயதுசென்று மரிக்கிறவனும் வாலிபனென்று எண்ணப்படுவான், நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான்.

ஏசாயா 11:4 நீதியின்படி ஏழைகளை நியாயம் விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வாக்கின் கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார்.

ஏசாயா 26:9,10 உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும்போது பூச்சக்கரத்துக்குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள். துன்மார்க்கனுக்குத் தயைசெய்தாலும் நீதியைக் கற்றுக்கொள்ளான்; நீதியுள்ள தேசத்திலும் அவன் அநியாயஞ்செய்து கர்த்தருடைய மகத்துவத்தைக் கவனியாதேபோகிறான்.


இந்நாட்களில்கூட நம் பாவங்கள் அனைத்திற்கும் காரணம் சாத்தான்தான் என நாம் தவறாகக் கருதுகிறோம். நன்மைசெய்யாதிருப்பது பாவம் என வேதாகமம் கூறுகிறது (ஆதியாகமம் 4:6; யாக்கோபு 4:17). நாம் நன்மைசெய்ய நினைக்கையில் சாத்தான் நம்மைத் தடுப்பதில்லை. அப்படியே தடுத்தால்கூட அதைமீறி நன்மைசெய்வது நமக்குக் கடினமல்ல. எனவே சாத்தானின் வஞ்சகத்தால் மட்டுமின்றி, நம் சுயவிருப்பத்தாலும் நாம் பாவம் செய்கிறோம் என்பதே உண்மை.

எனவே சாத்தான் இல்லாத 1000 வருட யுகத்திலும் பாவம் செய்பவர்கள் செய்யத்தான் செய்வார்கள். சாத்தானின் வஞ்சகத்தால் செய்யக்கூடிய பாவங்கள் மட்டும் அப்போது இருக்காது எனும் உத்தரவாதம் உண்டு.

soulsolution wrote:
//நீங்கள் சொல்லும் 'கற்பனைகள்' கைக்கொள்ள தேவன் முன்குறிக்காத யாரும் அவைகளைக் கைக்கொள்ள பிரயாசப்பட்டாலும் தோல்வியடைவார்கள். ஏனென்றால் அவர்கள் அவிசுவாசத்திற்கென்றே நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.//

இதெல்லாம் வசன ஆதாரம் இல்லாத கருத்துக்கள். எல்லா மனிதரும் தமது கற்பனைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அவற்றைத் தேவன் சொல்லியிருக்கிறாரேயொழிய, இவர்கள் மட்டும் கீழ்ப்படிந்தால் போதும், இவர்கள் கீழ்ப்படிய அவசியமில்லை என தேவன் நினைப்பதில்லை.

soulsolution wrote:
//மாற்கு 4:11,12. வேதம் அவர்களுக்கு புரிய வேண்டிய அவசியமே இல்லை.//

அவசியம் இல்லை என்பதல்ல. அவர்களுக்கு வாஞ்சை இல்லை; எனவே அவர்கள் தங்கள் குருட்டுத்தனத்தில் நிலைத்திருக்கும்படி செய்யப்பட்டது. மாற்கு 4:11,12 மற்றும் அதனோடு ஒத்த வேதவசனங்களையும் சற்று படித்துப் பாருங்கள்.

மாற்கு 4:11,12 அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது; புறம்பே இருக்கிறவர்களுக்கோ இவைகளெல்லாம் உவமைகளாகச் சொல்லப்படுகிறது. அவர்கள் குணப்படாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது என்றார்.

மத்தேயு 13:11-16 அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை. உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவன் எவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும். அவர்கள் கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்துகொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன். ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது: காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள். இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்பதே.

“உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவன் எவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.” எனும் இக்கூற்றை நிதானமாக யோசித்துப் பாருங்கள். முயற்சியும் வாஞ்சையும் எவனுக்கு இருக்கிறதோ, அவனுக்கு ஆவிக்குரிய காரியங்கள் மேலும் மேலும் அருளப்பட்டு, பரிபூரணமாக்கப்படுவான். முயற்சியும் வாஞ்சையும் இல்லாதவனுக்கு எதுவும் அருளப்படாது என்பதோடு, அவனிடமுள்ள கொஞ்சநஞ்ச ஆவிக்குரிய காரியங்களும் எடுத்துக்கொள்ளப்படும்.

இதில் தேவநியமனம் எதுவுமில்லை. அவரவரின் வாஞ்சையின் அடிப்படையிலேயே இவ்வாறு நடக்கிறது.

மாற்கு 4:12-ல் உள்ள ஒரு வாசகத்தை சற்று கவனித்துப்பாருங்கள். “அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்படாதபடிக்கு” அவ்வாறு நடப்பதாக இயேசு சொல்கிறார். ஆம், ஒருவனிடம் வாஞ்சை இல்லாவிடில், ஆவிக்குரிய காரியங்கள் அவனுக்கு அருளப்படாது, எனவே அவன் ஆவிக்குரிய முன்னேற்றத்தைப் பெறமாட்டான்; இறுதியில் அவன் பாவங்கள் மன்னிக்கப்படாமல் அவன் அழிவைத்தான் பெறுவான்.

எனவேதான் கற்பனைகளின்படி நடப்பதற்கு வாஞ்சை வேண்டும், பிரயாசம் வேண்டும் என மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறேன். நீங்களோ, “அதெல்லாம் வேண்டாம், நாம் பிரயாசப்பட்டு எதுவும் நடக்காது; தேவன் யாரை நியமித்துள்ளாரோ அவர்கள் மட்டுந்தான் கற்பனைகளின்படி நடப்பார்கள்” என்று சொல்லி, ஜனங்களின் பாவங்கள் மன்னிக்கப்படாமல் அழிவதற்கு வழிவகுக்கிறீர்கள். உங்கள் முடிவை சற்று ஒதுக்கிவிட்டு, மேற்கூறிய வசனங்களை மீண்டுமொருமுறை தியானிக்கும்படி அன்போடு வேண்டுகிறேன்.

குறிப்பாக, “உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவன் எவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.” எனும் வாசகத்தையும் “அவர்கள் குணப்படாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும்” எனும் வாசகத்தையும் தியானிக்கும்படி வேண்டுகிறேன்.

soulsolution wrote:
//ஒரு மனிதனின் செயல்களுக்கு தேவன் பொறுப்பில்லை என்றால் தேவனை விட மனிதன் உயர்ந்துவிடுகிறான்.//

மனிதர்களுக்குக் கொடுக்கப்பட்ட சுயாதீனத்தை நீங்கள் ஏற்காததால்தான், இப்படியெல்லாம் கூறுகிறீர்கள்.

soulsolution wrote:
//"அந்த சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல், கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது." ரோமர் 8:21

சுய இஷ்டம் என்று ஒன்றுமே இல்லை சகோதரரே, சகலமும் அவரது 'இஷ்டப்படி' தான் நடக்கிறது. இதில் நாம் பெருமைபாராட்ட ஒன்றுமே இல்லை.//

ரோமர் 8:21-ஐ ஒட்டின வசனங்களை பல்வேறு ஆங்கில மொழிபெயர்ப்புகளில் படியுங்கள்; கிரேக்க வார்த்தைகளின் அர்த்தங்களை எடுத்து ஒருங்கிணைத்துப் பாருங்கள். அதன் கருத்து இதுதான் எனத் திட்டமாகக் கூறமுடியாதபடி இருப்பதை நீங்கள் காணலாம்.

எத்தனையோ வசனங்கள், “கற்பனைகளின்படி நடங்கள்; நடந்தால் ஆசீர்வாதம், நடவாவிட்டால் சாபம்” என நேரடியாகக் கூறியிருக்கையில், நேரடியான/தெளிவான கருத்தைச் சொல்லாத ரோமர் 8:21-ஐக் காட்டி, இதன் கருத்து இதுதான் எனச் சொல்வது அவசியமா என சிந்தித்துப் பாருங்கள்.

இதற்குமேல் மற்றதை நியாயத்தீர்ப்பு நாளில் பார்த்துக்கொள்வோம்.

பிரசங்கி 12:13 காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

அன்பு சகோதரரே

"பாவத்தின் சம்பளம் மரணம்(மரிக்கும் வாய்ப்பு அல்ல); தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்(வாய்ப்பு அல்ல)" ரோமர்6:23.

"நீதிமான் ஒருவனாகிலும் இல்லை" "எல்லோரும் பாவஞ்செய்து தேவமகிமையற்றவர்களானார்கள்". எல்லாருமே பாவிகள்தான் என்பதில் உங்களுக்கு இன்னமும் சந்தேகமா? அல்லது இன்னும் 'கிரியை' மூலம் ஒருவன் நீதிமானாகமுடியும் என்று எண்ணிக்கொண்டிருக்கிறீகளா என்று தெரியவில்லை.

//நீங்கள் சொல்லும் 'கற்பனைகள்' கைக்கொள்ள தேவன் முன்குறிக்காத யாரும் அவைகளைக் கைக்கொள்ள பிரயாசப்பட்டாலும் தோல்வியடைவார்கள். ஏனென்றால் அவர்கள் அவிசுவாசத்திற்கென்றே நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.//
நீங்கள் எழுதியது:
இதெல்லாம் வசன ஆதாரம் இல்லாத கருத்துக்கள். எல்லா மனிதரும் தமது கற்பனைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அவற்றைத் தேவன் சொல்லியிருக்கிறாரேயொழிய, இவர்கள் மட்டும் கீழ்ப்படிந்தால் போதும், இவர்கள் கீழ்ப்படிய அவசியமில்லை என தேவன் நினைப்பதில்லை.


எல்லாமனிதரும் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்றால் அவர் எல்லா மனிதருக்கும் கற்பனைகளைத் தெளிவாக போதித்திருக்க வேண்டும். அப்படி நிச்சயம் நடக்கவேயில்லையே. இன்றைக்கு தங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொள்ளும் கூட்டத்திற்கே தேவன் யார் , கிறிஸ்து யார், மரணம் என்றால் என்ன என்று தெரியவில்லை. கேட்டால் அவர்களை அவர் மனசாட்சிப் பிரமாணத்தின்படி நியாயம்தீர்ப்பார் என்கிறீர்கள். அது சரியான முறையெ
னில் எல்லாரையுமே மனசாட்சியின்படி நியாயம் தீர்க்க வேண்டியதுதானே. ஏன் இஸ்ரவேலருக்கு மட்டும் கற்பனைகள், மற்றவர்கள் புறஜாதி? "தெரிந்துகொண்டவர்களின் சபை".  வேதத்தில் ஏன் இத்தனை குழப்பங்கள்?

"உலகம் அந்த சத்திய ஆவியானவரைக் காணாமலும், அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ள மாட்டாது...." யோவான் 14:17
உலகம் சத்திய ஆவியைப் பெற்றுக்கொள்ளாது என்று திட்டவட்டமாக வேதம் கூறினாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறீர்கள். கிறிஸ்துவும்  அப்போஸ்தலர்களும் நீங்கள், நீங்கள் என்று எழுதியிருப்பது உலகம் முழுவதற்கும் என்று தவறாகப் புரிந்து கொள்வதனால்தான் இத்தகைய விவாதங்கள். வேதம் உலகத்துக்கு அல்ல. அப்படி இருக்கும்பட்சம் அது மிகப்பெரிய தோல்வியே.

மாற்கு 4:11,12 அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது; புறம்பே இருக்கிறவர்களுக்கோ இவைகளெல்லாம் உவமைகளாகச் சொல்லப்படுகிறது. அவர்கள் குணப்படாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது என்றார்.

"ஆகையால் விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையேறப்பெற்றது; கீழ்ப்படியாமலிருக்கிறவர்களுக்கோ வீட்டைக் கட்டுகிறவர்களால் தள்ளப்பட்ட பிரதான மூலைக்கல்லாகிய அந்தக் கல் இடறுதற்கேதுவான கல்லும் விழுதற்கேதுவான கன்மலையுமாயிற்று; அவர்கள் திருவசனத்திக்று கீழ்ப்படியாமலிருந்து இடறுகிறார்கள்; அதற்கென்றே நியமிக்கப்பட்டவர்களாயும் இருக்கிறார்கள்." 1 பேதுரு 2:7,8.

""மூன்றாம் நாளிலே அவரை தேவன் அவரை எழுப்பிப் பிரத்யட்சமாய்க் காணும்‍படி செய்தார். ஆயினும் எல்லா ஜனங்களுக்கும் பிரத்தியட்சமாகும்படி செய்யாமல், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தபின்பு அவரோடே புசித்துக் குடித்தவர்களும் தேவனால் முன்பு நியமிக்கப்பட்ட சாட்சிகளுமாகிய எங்களுக்கே பிரத்யட்சமாகும்படி செய்தார்" அப்:11:40,41

ஏன்? எல்லாருக்கும் காட்சியளித்திருந்தால் முழு எருசலேமே 'இரட்சிக்கப்பட' வாய்ப்பிருந்திருக்குமே.

வேதம் முழுவதும் நீங்கள் நீங்கள் என்று வருவது உலகம் முழுவதற்கும் என்று அர்த்தம் அல்ல.

"ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி....." 2பேதுரு 3:9

" எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும்....."2 தீமோ 2:4

"எல்லாரையும் மீட்கும் பொருளாக..." 5

"எல்லா மனுஷருக்கும்.... விசுவாசிகளுக்கும் இரட்சகர்"  4:10

'எல்லா ம்னுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவ கிருபை.." தீத்து2:11

"... ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று" ரோமர் 5:18

"எப்படியெனில், மற்ற மனுஷரும், என்னுடைய நாமம் தரிக்கப்படும் சகல ஜாதிகளும், கர்த்தரைத் தேடும்படிக்கு, நான் இதற்குப்பின்பு திரும்பிவந்து......" அப் 15:16:17
திரும்பி வந்தபின்புதான் தேடுவார்கள் இப்போது அல்ல. முதலில் இரட்சிப்பு பின்புதான் அறிவு. இப்போது அல்ல.

எல்லாரும் இப்போது அறிந்துகொள்ளவே மாட்டார்கள் என்றுதான் வேதம் தீர்க்கதரிசனமாகக் கூறுகிறது அது முழுமையாக நிறைவேறியும் வருகிறது. இதற்கு மாறாக நாம் எல்லாரையுமே 'தகுதிப்படுத்த' தேவையற்ற, தேவதிட்டத்தில் இல்லாத ஒன்றுக்காக பிரயாசப்படுவதால்தான் தோல்விமேல் தோல்வி.

சுயாதீனம் பற்றி(அப்படி ஒன்று இல்லவே இல்லை) சமயம் வாய்க்கும்போது பதிப்பேன். கொஞ்சம் பொறுங்கள்.

சர்ப்பத்தால்தான் தேவன் ஆதாம், ஏவாளின் உண்மையான தன்மைகளைப் புரிந்துகொண்டார் என்றால் அவர் சர்ப்பத்தை ஏன் தண்டிக்கவேண்டும். அவனைப் பாராட்டியல்லவா இருக்கவேண்டும்.
"நண்பனே நான் பூரணமாகப் படைத்த இந்த மனுஷப்பிறவிகள் உண்மையில் குறைவுள்ளவர்கள் என்று நிரூபித்துவிட்டாய் சபாஷ்" என்று தட்டிக்கொடுத்திருக்க வேண்டும்.

பிரசங்கி 12:13 காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.

இந்தக் கடமை 1000 வருடத்தில் பூரணமாக நிறைவேறி எல்லா மனுஷரும் நித்திய ஜீவனை அடைவார்கள்.


-- Edited by soulsolution on Wednesday 24th of February 2010 04:03:02 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

சகோ.ஆத்துமா அவர்களே!

இத்திரியின் தலைப்பை விட்டு விலகி நம் விவாதம் செல்கிறது. இவ்விவாதத்தில் எனக்கு 2 கேள்விகள் மட்டும் உள்ளன. அவற்றிற்கான பதிலை பின்வரும் திரிகளில் கூறும்படி வேண்டுகிறேன்.

http://kovaibereans.activeboard.com/forum.spark?aBID=128972&p=3&topicID=34277871

http://kovaibereans.activeboard.com/forum.spark?aBID=128972&p=3&topicID=34277982

ஆத்துமா பற்றிய உங்கள் கருத்துக்களை இத்திரியில் இனி தொடருங்கள்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Member

Status: Offline
Posts: 9
Date:

நான் என்னுடைய (நித்திய ஜீவனைப் பற்றி) கருத்தை விரைவில் பதிவு செய்கிறேன்.



-- Edited by SANDOSH on Friday 26th of February 2010 09:01:42 PM

__________________
1 2  >  Last»  | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard