" நாங்கள் ஞான இருத்யமுள்ளவர்களாகும்படி எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்கு போதித்தருளும். (சங்.90:12)
ஓர் உண்மைக் கிறிஸ்தவன் தன் நாட்களை எண்ணும் போது, அவன் தன் நாட்களை அறிந்தவனாக துக்கத்தோடு அல்ல, நிதானமாக எண்ணுகிறான். இவன் தன் நாட்களை எண்ணும்போது, தான் பெற்ற ஆசீர்வாதங்களுக்காகவும், நல் ஈவுகளுக்காகவும், தேவனை ஸ்தோத்தரித்து இருளிலிருந்து ஒளியினிடத்திற்கு வழி நடத்தினவரின் புண்ணியங்களைத் தெரிவிக்கிறவனாகவும், பரம கானானுக்குத் தன்னுடன் பிரயாணம் செய்யும் உடன் சகோதரருக்கு உதவுகிறதிலும், கருத்துள்ளவனாக இருப்பான். மேலும் நாளுக்கு நாள் தேவனுடைய பார்வைக்குப் பிரியமானதை செய்யவும், தன்னில் தானே நல்லொழுக்கத்தில் வளருகிறவனாகவும், கிறிஸ்துவின் சாயலாகத் தன்னை நாளுக்கு நாள் வளரச் செய்கிறவனாகவும் இருப்பான். ( சங்கீதம், 39:4)