"தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபை பெற்றாய். இதோ நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளூவார்; அவருடைய ராஜ்ஜியத்திற்கு முடிவிராது என்றான்".
என்ன ஒரு அற்புதமான வசனங்கள்? நாம் அனைவருமே அறிந்த ஆனால் அதிகம் தியானிக்காத வசனங்கள் இவைகள். ஏனென்றால் கிறிஸ்துவைப் பற்றி சொல்லப்பட்ட வசனங்கள் இன்னும் நிறைவேறவில்லை. அவர் பெரியவராகவில்லை, உன்னதமானவருடைய குமாரன் என்று இன்னும் எண்ணப்படவில்லை(உன்னதமானவர் என்றுதான் இன்றைய கிறிஸ்தவத்தால் அறியப்படுகிறார்). தேவன் இன்னும் தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுக்கவில்லை. யாக்கோபின் குடும்பத்தாரை இன்னும் அரசாள ஆரம்பிக்கவே இல்லை. அவருடைய ராஜ்ஜியம் இன்னும் தொடங்கவில்லை.
இப்போதுதான் ஆரம்பக்கட்ட வேலைகள், ஆயத்தப்பணிகள் நடந்துகொண்டிருக்கிறது. சபை பூரணப்பட்டு முதலாம் உயிர்த்தெழுதல் நடந்து முடிய வேண்டும்; பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களின் உயிர்த்தெழுதல் நடந்து அவர்கள் பூமியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும்; பொதுவான உயிர்த்தெழுதலின் போது அவனவன் தன் தன் வரிசையில் உயிர்ப்பிக்கப்பட்டு நீதி கற்றுக்கொடுக்கப்பட வேண்டும். முடிவில்லாத அவருடைய ராஜ்ஜியத்துக்கு எல்லாரும் தகுதி பெற்று நித்திய ஜீவனில் பங்கடைய வேண்டும்.
அவருடைய ராஜ்ஜியம் பூமிக்குரியது என்று தெளிவாக வசனம் கூறியும் கூட கண்ணுக்கே தெரியாத ஒரு ரகசிய ராஜ்ஜியம் இப்போதே கிறிஸ்தவர்களிடத்தில் செயல் பட்டுக்கொண்டிருப்பதாக இன்று தவறாக நம்பப்பட்டுக்கொண்டிருக்கிறது.