இன்று (18/10/2009) காலை தமிழன் டீவியில் ஒரு செய்தி கேட்டேன். சென்னையை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட சபைக்காரர் இந்த செய்தியை கொடுத்தார். அதாவது, "உம்முடைய ராஜியம் வருவதாக" மத். 6:10 என்கிற ஒரு வசனம் இயேசு கிறிஸ்து சிலுவையில் ஏறும் முன் மாத்திரமே சொல்லவேண்டிய வசனம். அவர் சிலுவை ஏறி உயிர்த்தெழுந்த பிறகு இப்போ அந்த வசனத்தை அப்படி சொல்லக்கூடாது மாறாக, உம்முடிய ராஜியத்திற்காக நன்றி, எங்களை நீர் இந்த ராஜியத்தில் வைத்ததற்காக நன்றி என்று தான் சொல்ல வேண்டுமா. "உம்முடைய ராஜியம் வருவதாக" என்று யாராவது ஜெபித்தாலோ அல்லது சொல்லிக்கொடுத்தாலோ, அது கள்ள உபதேசமாம், அவர்கள் கள்ள போதகர்களாம்.
இப்படி பாதி வசனத்திற்கு விளக்கம் சொன்னவர், அதற்கு தொடர்ச்சியாக வருகிற, "உம்முடைய சித்தம் பரமண்டலங்களில் செய்யப்படுகிறது போல பூமியிலும் செய்யப்படுவதாக" என்கிற வசனத்தின் இந்த பகுதி இப்பொழுது சரியா என்று சொல்லவில்லை. அதாவது தேவனின் ராஜியம் வந்து விட்டல் அவரின் சித்தம் பரலோகத்தில் செய்யப்படுகிறது போல் இந்த பூமியிலும் செய்யப்படவேண்டும். அப்பொழுது தான் தேவனின் ராஜியம் என்று சொல்ல முடியும். இப்பொழுது தேவனின் சித்தம் இந்த பூமியில் நடைபெறுகிறதா என்று கூட கவனிக்க முடியாத ஒரு பிரசங்கியாராக இருக்கிறார்.
இது மட்டும் இல்லை, அப்போஸ்தலர்களும் இப்படி நாம் ராஜியத்தில் இருக்கிறோம் என்றே போதித்தார்களாம். பாவம் பவுல் மட்டும் தெரியாமல், "இப்பொழுது இருக்கிற பொல்லாத பிரபஞ்சம்" (கலா. 1:4) என்று "தேவனின் ராஜியத்தை" குறித்து எழுது விட்டார். இது மட்டுமா, தேவனின் ராஜியத்தில் "இப்பிரபஞ்சத்தின் தேவனான" (2 கொரி. 4:4) சாத்தானுக்கு என்ன வேலை என்பதை கூடவா அவர் கவனிக்கவில்லை. அப்போஸ்தலர்கள் நாம் தேவனின் ராஜியத்தில் தான் இருக்கிறோம் என்று சொல்லி கொடுத்தார்களாம் ஆனால் அந்த தேவனின் ராஜியத்தை பவுல் "இப்பொழுது இருக்கிற பொல்லாத பிரபஞ்சம்" என்றும், இதை ஆளுகை செய்பவன் "இப்பிரபஞ்சத்தின் தேவன்"ஆன சாத்தான் என்றும் எழுதுவது வினோதமாக இல்லையா? இன்னும் பேதுரு எழுதும் போது, இனி வர போகும் உலகம், அது நீதி வாசம் செய்யும் உலகம் ஒன்று இனி தான் வரும் என்று எழுதுகிறாரே (2 பேது 3:13). இப்பொழுது தேவனின் ராஜியம் நடக்குது என்றால் எப்படி பட்ட நீதி நிறைந்த பூமியாக் இப்பொழுது இருக்கிறது?
மேலும் கடந்த 2000 வருடங்களாக இப்படி பட்ட தேவனின் ராஜியம் நடந்து வருகிறதாம். இப்படி தேவனின் ராஜியம் நடக்கும் போது தான் கத்தோலிக்க சபையின் மூலம் வேதம் மறைக்கப்பட்டு, எரிக்கப்பட்டதாம்.
அப்படி என்றால் ஏசா 35ம் அதிமாரம் எப்படி பட்ட தேவனின் ராஜியத்தை குறித்து எழுதப்பட்டது. சீயோன் என்றால் என்ன?
எப்படி எல்லாம் புதுமையான ஒரு போதகத்தை குடுத்து இவர்கள் பிறரை கள்ள போதகர்கள் என்று வர்னித்து வருகிறார்கள் என்பது தான் விச்சித்தரமாக இருக்கிறது.