"நான் தேவனுக்கு ஊழியம் செய்கிறேன்" என்று சொல்லித்திரியும் யாவரையும் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். குறிப்பாக எதாவது ஒரு விதத்தில் உங்களிடம் பணத்தை எதிர்பார்ப்பவர்கள் 'ஓநாய்கள்' ஆவார்கள். ஏனென்றால் புதிய ஏற்பாட்டின்படியான சபையில் எல்லோருமே "ராஜாக்களும், ஆசாரியர்களுமாம்".
அவர்களுடைய கனிகளால் அவர்களை அறிந்து கொள்ளலாம். இதில் Part time, Full time என்று வேதத்தில் இல்லை. "ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புது சிருஷ்டியாக இருக்கிறான்"
"பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்; தேவ ஆவியை நீங்கள் எதினால் அறியலாமென்றால் மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது" 1 யோவான் 4:1,2
ஆம் பிரியமானவர்களே, அப்போஸ்தலர் காலத்திலேயே இப்படி ஒரு நிலை இருந்திருக்கிறது என்றால் இன்றைய நிலைமையை யோசித்து தான் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. சுத்தமான வசனங்கள், தேவனின் வார்த்தைகளை அப்படியே சொன்ன அப்போஸ்தலர்கள், அவர்கள் கைகளை வைத்து அனுப்பிய சீஷர்கள் மத்தியில் இப்படி எல்லாம் தோன்றியிருந்ததாக எழுதியிருக்கிறார்.
தேவ ஆவிகள் என்று பண்மையில் எழுதியிருப்பதை நம்மவர்கள் கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன். இல்லாவிட்டால், பரிசுத்த ஆவியான தேவர்கள் என்று கூட யாராவது தொடங்கி திருத்துவத்தோடு நிற்காமல் அநேக தேவர்கள் உள்ள ஒரு மார்கமாக நடத்தி சென்றிருப்பார்கள்.
மாம்சத்தில் வந்தவர் பிதாவாகிய தேவன் தான் என்று பிரசங்கிப்பவர்கள் கவனிக்க வேண்டிய வசனம் இது. மாம்சத்தில் வந்தவர் இயேசு கிறிஸ்து தான் என்று அறிக்கை செய்ய வேண்டும். ஆனால் இன்றோ, "இயேசு சாமி", "இயேசப்பா", "இயேசு நாதர்", "அருள் நாதர்" போன்று அநேக வேறு இயேசு வந்துவிட்டார்கள். இயேசு கிறிஸ்து என்கிற இந்த நாமத்தில் பிரசங்கிப்பவர்கள் வெகு சிலரே. ஆகவே எச்சரிக்கையாக இருந்து வசனத்தை மாத்திரமே சார்ந்திருப்பது தான் உத்தமம்.
"அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்; அவர்கள் என்னை விசுவாசியாதபடியினாலே பாவத்தைக்குறித்தும், நீங்கள் இனி என்னைக் காணாதபடிக்கு நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினாலே நீதியைக்குறித்தும்; இந்த உலகத்தின் அதிபதி நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார்." யோவான் 16:8-11.
அவர் என்றவுடன் அவர் ஒரு மனிதன் என்று இல்லை, தேவனின் (பிதாவின்) ஆவி (சிந்தை, வல்லமை) வரும் போது (பெந்தேகோஸ்தே நாளில் வெளிப்பட்டது) நடக்கும் காரியங்களை குறித்து சொல்லுகிறார், நம் எஜமானன இயேசு கிறிஸ்து.
முதலாவது பாவம் என்றால் "இயேசு கிறிஸ்துவை விசுவாசியாமல் இருப்பதே பாவம்" என்பதாகும். "பீடி குடித்துக்கொண்டிருப்பவர்கள்" போன்றவர்களை ஏதோ பெரிய பாவிகளாக பிரசங்கிக்கும் நம் பிரசங்கிமார்கள், இந்த வசனத்தை கவனிப்பதில்லை போல். அது நாள் தான் இயேசு கிறிஸ்து யார் என்றே சரி வர பிரசங்கியாமல் இருக்கிறார்கள். இன்று இயேசு கிறிஸ்து என்கிற நாமம் அநேகருக்கு தெரிந்திருக்கிறது. ஹிந்து நண்பர்கள் வீட்டிலும் கூட இயேசு கிறிஸ்துவின் படம் (!) வைத்து அவரை ஒரு கடவுளாக நம்புகிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அதுவா விசுவாசம். முதலாவது, இயேசு கிறிஸ்து என்பவர் உன்னதமான தேவனின் ஒரே பேறான குமாரன் என்பதை தெரியனுமே. இதை விட்டு விட்டு, பிதா தான் இயேசு கிறிஸ்து என்றும் இயேசு கிறிஸ்து தான் பிதா என்கிற விசுவாசம் எப்படி பட்ட விசுவாசம். இதைக்கூட உணராத போதகர்களும் பிரசங்கிமார்களும் எப்படி பட்ட விசுவாசத்தில் இருக்கிறார்கள்?